Published : 09 Feb 2024 03:38 PM
Last Updated : 09 Feb 2024 03:38 PM

முடிச்சூர் ஆம்னி பேருந்துகள் பராமரிப்பு நிலையம் மார்ச் மாதம் ஒப்படைப்பு: அரசு தகவல் @ ஐகோர்ட்

சென்னை: கிளாம்பாக்கத்தில் இருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள முடிச்சூரில் 5 ஏக்கர் பரப்பில் ஆம்னி பேருந்துகளுக்கு அனைத்து வசதிகளுடன் பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, மார்ச் மாதம் ஒப்படைக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து தான் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்று ஜனவரி 24 -ம் தேதி போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, எந்தெந்த வழித்தடங்களில் ஆம்னி பேருந்துகள், பயணிகளை ஏற்ற அனுமதி வழங்கப்படும் என்பது குறித்தும், மாற்று வழித்தடங்களை அடையாளம் கண்டு அதற்கான வரைபடத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின்படி, தமிழக அரசு தரப்பில், சென்னை நகரில் ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப்படும் வழித்தடங்களின் இரு வரைபடங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது ஆம்னி பேருந்து நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ஆம்னி பேருந்து நிறுவனங்களின் பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்ட தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தனியார் பேருந்துகள் போரூர், சூரப்பட்டு ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம். கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதித்தால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதற்கு கட்டப்பட்டது என்ற கேள்வி எழும். ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், கிளாம்பாக்கத்தில் இருந்து 8 கிமீ தூரத்தில் உள்ள முடிச்சூரில் 5 ஏக்கர் பரப்பில் ஆம்னி பேருந்துகளுக்கு அனைத்து வசதிகளுடன் பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, மார்ச் மாதம் ஒப்படைக்கப்படும் என உறுதியளித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தனியார் பேருந்து பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி, இறக்குவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x