Published : 09 Feb 2024 12:36 PM
Last Updated : 09 Feb 2024 12:36 PM
மதுரை: தை அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலையிலிருந்து பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு வைகை ஆற்றில் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
மறைந்த முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய அமாவாசை தினங்களில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்து வழிபடுவது இந்துக்களின் வழக்கம். அதன்படி தை அமாவாசை, ஆடி மாத அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகியவை முக்கியமான நாட்களாகும். மாதந்தோறும் அமாவாசையன்று தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள் இந்த மூன்று மாத அமாவாசைகளில் விரதமிருந்து தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம்.
அதன்படி இன்று தை அமாவாசையை முன்னிட்டு மதுரையில் வைகை ஆற்றில் பக்தர்கள் தமது மறைந்த முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் விட்டு தர்ப்பணம் செய்து சூரியனை வழிபட்டனர். வைகை ஆற்றில் மதுரை பேச்சியம்மன் படித்துறை, சிம்மக்கல் பாலம் அடிவாரம் ஆகிய பகுதிகளில் அவர்கள் தர்ப்பணம் செய்தனர். அதேபோல், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில், இம்மையில் நன்மை தருவார் கோயில் ஆகியவற்றிலும் தர்ப்பணம் செய்யப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையிலும் பக்தர்கள் தர்ப்பணம் செய்தனர். சோழவந்தான் வைகை கரையிலும், குருவித்துறை உள்பட பல்வேறு இடங்களிலும் தை அமாவாசை தர்ப்பணம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த திருப்புவனம் வைகை ஆற்றிலும் ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் செய்தனர். இதில் புரோகிதர்கள் வேத மந்திரங்களை உச்சரித்து தர்ப்பணம் செய்து வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT