Published : 09 Feb 2024 10:39 AM
Last Updated : 09 Feb 2024 10:39 AM
விழுப்புரம்: விழுப்பும் அருகே மின்வாரியத் துறையின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி 18 வயது இளைஞர் தனது இரு கால்களையும் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே சோழம்பூண்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியையொட்டி தாழ்வாக 22 கிலோ வாட் உயர் அழுத்த மின் கம்பியை மாற்றி அமைக்குமாறு ஒரு ஆண்டுக்கு முன் ஊராட்சி மன்றம் சார்பில் பூத்தமேடு துணை மின் நிலையத்தின் உதவி மின் பொறியாளருக்கு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதேபோல ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 24.6.2022ம் தேதியும், 21.12.2022ம் தேதியும் இதே கோரிக்கையை முன்வைத்து கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 17ம் தேதி மாலை 6 மணிக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் பூபாலன் ( 18 ) என்ற இளைஞர் தன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அப்போது பந்து பள்ளியின் மொட்டை மாடியில் பந்து விழுந்துள்ளது. இருட்டிவிட்டதால் மறுநாள் 18ம் தேதி காலை பூபாலன் பள்ளியின் மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். முன் இரவில் பெய்த மழை நீர் மொட்டை மாடியில் தேங்கி நின்றதால் வெற்றுக் காலுடன் சென்று பந்தை எடுத்துக்கொண்டு நிமிர்ந்தபோது உயர் அழுத்த மின் கம்பி பூபாலன் தலையில் உரசியதில் மின்சாரம் தாக்கி மயங்கியுள்ளார். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு எழுந்த போது அவரால் எழுந்திருக்க முடியவில்லை. கால்கள் மரத்து போனது போலாகி விட்டது.
அதன் பின் அவர் கூச்சலிட அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, மின்சாரம் தாக்கியதில் சேதமடைந்ததால் அவரின் இரு கால்களும் முழங்காலுக்கு கீழே அகற்றப்பட்டன. இதன் பின் மாரிமுத்து காணை போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் ஜனவரி 20ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து விழுப்புரம் மின்வாரிய ( விநியோகம் ) செயற் பொறியாளர் ( பொறுப்பு ) சுரேஷ் குமார் விழுப்புரம் மேற்பார்வை பொறியாளர் லட்சுமிக்கு அனுப்பிய விசாரணை அறிக்கையில், விபத்து நடைபெற்ற மறுநாள் 19ம் தேதி மின்பாதை மாற்றி அமைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
விபத்து ஏற்பட்ட மின் பாதையை 11 மாதங்களுக்கு முன்னரே அனுமதிக்கப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டதாகவும், அது குறித்த தகவல் எதுவும் தனக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் கஞ்சனூர் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். விபத்து நடைபெறுவதற்கு 11 மாதங்கள் முன்பே மின்பாதையை மாற்றி அமைக்க மின்வாரியம் அனுமதி அளித்தும் அதை மின்வாரிய அலுவலர்கள் செயல்படுத்தாததால் தான் இவ்விபத்து நடைபெற்று இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து விழுப்புரம் தலைமை மின்வாரிய பொறியாளர் காளிமுத்துவிடம் கேட்ட போது, "இது குறித்து மேற்பார்வை பொறியாளரிடம் தகவல் பெற்றுக்கொள்ளுங்கள். ரூ 5 லட்சம் வரை மின் வாரியம் இழப்பீடு வழங்கலாம். ஆனால் மேற்பார்வை பொறியாளர்தான் முடிவெடித்து அறிக்கை அனுப்ப வேண்டும்" என்றார்.
இதனை தொடர்ந்து மேற்பார்வை பொறியாளர் லட்சுமியிடம் கேட்டபோது, "பாதிக்கப்பட்ட இளைஞருக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார். இதற்கிடையே விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 01.04.2022 முதல் 01.04.2023 வரை 29 மின் விபத்துகளில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் 10 மின் விபத்துகள் ஏற்பட்டு மனிதர்களும், விலங்குகளும் இறந்துள்ளதாக மின் வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் கள ஆய்வு செய்து, பழமையான மின்கம்பிகள்; மின் பாதைகள், பழுதடைந்த, சாய்ந்த மின் கம்பங்கள், பழுதான இழுவை கம்பிகள், அகற்றப்பட வேண்டிய மரக்கிளைகள் உள்ளிட்ட விவரங்களை அரசு பெற்றுள்ளது. கடந்த ஆண்டு கெடார் அருகே நடைபெற்ற மின் விபத்தில் மின்வாரிய ஊழியர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இளைஞர் பூபாலன் விபத்தில் சிக்கியதை அடுத்து, தொடர்ந்து கடந்த ஜனவரி 7ம் தேதி வெள்ளையாம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த கலை செல்வன் என்பவர் மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ளார். இப்படி தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று கொண்டு தான் உள்ளது. ஆனால் மின்வாரிய ஊழியர்கள் மீது எவ்வித துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மின்வாரிய தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். தமிழகத்துல் பழுது மற்றும் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளால் உண்டாகும் மனித உயிரிழப்புகளை தடுக்க, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், மின்சாரப் பகிர்மான விதித் தொகுப்பு 16 ( 2A )ன் படி புதிய மின்னிணைப்பு பெறுபவர்கள் ஆர்.சி.டி ( RCD ) என்றழைக்கக்கூடிய ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் ( Residual Current Device ) என்ற உயிர்காக்கும் சாதனத்தை தங்களுடைய மின்னிணைப்பில் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT