Published : 09 Feb 2024 04:04 AM
Last Updated : 09 Feb 2024 04:04 AM
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 13-வது வார்டுக்குட்பட்ட காந்தி நகர் - ஈபி காலனி செல்லும் 80 அடி சாலை இருள் சூழ்ந்து காணப்படுவதால், தெரு விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருப்பூர் நகராட்சியாக இருந்த போது கவுன்சிலராக இருந்த என்.கோபால கிருஷ்ணன் கூறியதாவது: 80 அடி சாலை என்பது தற்போது மாலை வேளைகளில் பதற்றம் நிறைந்த சாலையாக மாறிவிட்டது. பொதுமக்கள் அச்சப்படும் அளவுக்கு இரண்டு டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நிரம்பி காணப்படுகிறது. இதனால் தனியாக வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும் பெண்கள், வீட்டில் இருந்து பல்வேறு தேவைக்காக அவிநாசி சாலைக்கு இருசக்கர வாகனங்களிலோ அல்லது நடந்தோ வரும் பெண்கள், இந்த சாலை இருண்டு கிடப்பதால் மாலை வேளைகளில் வருவதற்கே அச்சப் படுகின்றனர்.
அதற்கேற்ப பெண்களிடம் செயின் பறிப்பு, இருட்டில் வாகன விபத்துகளும் நிகழ்ந்திருப்பதால், மக்கள் மனதில் அச்சம் அதிகரித்துள்ளது. குழப்பும் மாநகராட்சி: எங்கள் பகுதியில் வசிப்பவர்களும், தற்போது அதே போல் பாதுகாப்பு கருதி ஆட்டோ உள்ளிட்ட பிற வாகனங்களை பயன் படுத்து கின்றனர். 80 அடி சாலையில் முழுமையாக தெரு விளக்குகள் இல்லை. இருமருங்கிலும் 16 தெரு விளக்குகள் எரிவதில்லை. இதனால் மாலையில் எப்போதும் இருள்மட்டுமே சூழ்ந்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சியின் சமூக வலைதளமான வாட்ஸ் அப்புக்கு பல முறை புகார் அளித்தேன்.
அவர்கள் வேறு பகுதியில் தெரு விளக்கு பொருத்தியதை, 80 அடி சாலை என சுட்டிக்காட்டி, உங்கள் பிரச்சினை சரி செய்யப்பட்டது என சமாளிக் கின்றனர். ஒரு புகாரை முறையாக மாநகராட்சியின் வாட்ஸ் - அப்பில் பதிவு செய்தும் கூட உரிய பதில் தருவதில்லை. இன்றைக்கு வரை 80 அடி சாலையில் ஒரு தெருவிளக்குகூட எரிவதில்லை. ஆனால், மாநகராட்சி வாட்ஸ் அப் புகார் எண்ணில் அனைத்து புகார்களும் சரி செய்யப் பட்டதாக கணக்கு காண்பிக்கப்படுகிறது. இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே, மாநகராட்சி நிர்வாகத்துக்கு நற்பெயர் கிடைக்கும். இல்லையென்றால் பொது மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, மாநகராட்சி முழுவதும் மெர்குரி விளக்குகள், எல்இடி விளக்குகளாக மாற்றும் பணி தொடர்பாக கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதனால் மாநகர் முழுவதும் தெருவிளக்குகள் பணி தாமதமாக நடந்து வருகிறது” என்றார்.
மாநகராட்சி 13-வது வார்டு கவுன்சிலர் அனுசியா தேவி கூறும் போது, காந்தி நகர் 80 அடி சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் எல்இடி தெரு விளக்குகள் பொருத்த மாநகராட்சியில் கூறியுள்ளோம். ஒப்பந்ததாரர், பணி ஆர்டர் உள்ளிட்ட பணிகளால் தாமதமாகி வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் அந்த பணிகள் நிறைவடையும். அதன் பின்னர் காந்தி நகர் 80 அடி சாலையில் எல்இடி தெரு விளக்குகள் பொருத்தப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT