Published : 20 Feb 2018 09:53 AM
Last Updated : 20 Feb 2018 09:53 AM
அஞ்சல் நிலையங்களில் கூடுதல் சேவையாக பாஸ்போர்ட் பெறும் சேவை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, மேலும் 5 அஞ்சல் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
மக்களுக்கு பாஸ்போர்ட் பெறுவதற்கான சேவை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, மேலும் 5 அஞ்சல் நிலையங்களில் இந்த சேவை மையங்கள் தொடங்கப்படவுள்ளன.
இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஆர்.ஆனந்த், அஞ்சல் துறை தலைவர் (மெயில் மற்றும் வர்த்தக வளர்ச்சி) ஜே.டி.வெங்கடேஸ்வரலு ஆகியோர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
பொதுமக்கள் பாஸ்போர்ட் பெற வசதியாக அஞ்சல் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு மார்ச் 7-ம் தேதி சேலம் தலைமை அஞ்சல் நிலையத்திலும், மார்ச் 25-ம் தேதி வேலூர் தலைமை அஞ்சல் நிலையத்திலும் பாஸ்போர்ட் மையம் தொடங்கப்பட்டது. காரைக்காலில் கடந்த ஜனவரி 19-ம் தேதி தொடங்கப்பட்டது. மக்கள் மத்தியில் இந்த சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையடுத்து, அடுத்தகட்டமாக திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர், நாகர்கோவில், கடலூரில் பாஸ்போர்ட் மையங் கள் திறக்கப்பட உள்ளன. சென்னை நகர மண்டல அஞ்சல் துறைக்கு உட்பட்ட விழுப்புரம் தலைமை அஞ்சல் நிலையத்தில் வரும் 27-ம் தேதியும் திருவண்ணாமலை தலைமை அஞ்சல் நிலையத்தில் மார்ச் 1-ம் தேதியும் தென்மண்டல அஞ்சல் துறைக்கு உட்பட்ட விருதுநகர் தலைமை அஞ்சல் நிலையத்தில் வரும் 27-ம் தேதியும் நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையத்தில் வரும் 28-ம் தேதியும் பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட உள்ளன. மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட கடலூர் தலைமை அஞ்சல் நிலையத்தில் வரும் 27-ம் தேதி பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்படுகிறது.
இதுதவிர, ராமநாதபுரம், திண்டுக்கல், தேவகோட்டை உள்ளிட்ட 6 இடங்களில் விரைவில் அஞ்சல் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்படும். இதன்மூலம், சம்பந்தப்பட்ட மாவட்ட மக்கள் மட்டுமின்றி, அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பயன் பெறுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT