Last Updated : 08 Feb, 2024 07:44 PM

2  

Published : 08 Feb 2024 07:44 PM
Last Updated : 08 Feb 2024 07:44 PM

‘மக்களவைத் தேர்தலில் மக்கள் ஆதரிப்பர்’ - தேமுதிக நம்பிக்கையும் பின்புலமும்

பிரதிநிதித்துவப் படம்.

மதுரை: 'கேப்டனை தவறவிட்டுவிட்டோமே என கருதுவோர் எங்களை அதிகமாக ஆதரிப்பர்’ என்று நம்பிக்கையோடு மக்களவைத் தேர்தலில் தேமுதிக களமிறங்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழக திரையுலகில் சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வெற்றி வாகை சூடியவர் விஜயகாந்த். தனது 53-வது வயதில் தேமுதிக என்ற அரசியல் கட்சியை மதுரையில் தொடங்கினாலும், அவரது ரசிகர்கள் மன்றங்கள் அதிகமுள்ள கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாச்சலம் தொகுதியில் நின்று முதல் முறையிலேயே எம்எல்ஏவானார். சட்டசபைக்கு தனி ஆளாக நுழைந்தாலும், தொடர்ந்து கட்சியை பலப்படுத்தினார். திமுக, அதிமுகவுக்கு சரியான சவால் என்ற அடிப்படையில் 3-வது சக்தியாக உருவேடுத்தார். திமுக, அதிமுகவுமே தேமுதிகவை அணுகி கூட்டணிக்கு அழைக்கும் அளவுக்கு வளர்ந்தார்.

இந்த செல்வாக்கு மூலமே 2011-ல் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து, 29 தொகுதிளில் வென்று, விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார். தமிழக அரசியலில் மூன்றாவது சக்தியாக வேகமாக வளர்ந்தாலும், அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. தொடர்ந்து சில ஆண்டு உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்டு, இயக்க பணியை முழுமையாக செய்ய முடியாமல் இருந்தார். உடல்நலம் மிக மோசமான நிலையில், கடந்த டிசம்பர் 28-ல் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பை தாங்க முடியாது என்றாலும், தேர்தல் நேரம் என்பதால் தலைவர் கனவை நிறைவேற்றும் விதமாக குடும்பத்தினர், நிர்வாகிகள், ரசிகர்கள் வேறு வழியின்றி தேர்தல் களத்தை சந்திக்க வேண்டிய சூழலில் உள்ளனர்.

இதைத்தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா தலைமையில் புதன்கிழமை சென்னையில் நிர்வாகிகள் கூட்டம். தேர்தல் வெற்றி வாய்ப்பு, கூட்டணி நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. 14 'சீட்' மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் வழங்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என நிலைப்பாட்டை பிரேமலதா அறிவித்தார். இதன்படி, பார்த்தால் 14 சீட் வரை வழங்கக் கூடிய கட்சி எனில் திமுக, அதிமுக பாஜக தலைமையிலான கூட்டணியில் மட்டுமே சாத்தியம். திமுகவுடன் வாய்ப்பு மிக குறைவு, மொத்தமுள்ள 39 தொகுதியில் 14 தொகுதிகளை கொடுக்க அதிமுக முன்வராது. பாஜகவிலும் வாய்ப்பு குறைவு. இருந்தாலும், தேமுதிக இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பது அக்கட்சியினர் தைரியத்தை காட்டுகிறது. இதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்றால் தனித்தே களம் காண்பது என்றும் முடிவெடுத்து இருப்பதாக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

நிர்வாகிகள் சிலர் கூறியது: ''14+1 எதிர்பார்க்கிறோம். இதற்கான வாய்ப்புள்ள கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளது. பொதுச் செயலர் எங்களிடம் கருத்து கேட்டபோது, கூட்டணியில் மரியாதை இல்லை எனில் தனித்து நிற்கவே தயாராகவேண்டும் என அறிவுறுத்தினோம். விஜயகாந்தின் மறைவுக்கு பிறகு குறிப்பாக தென் மாவட்டத்தில் குடும்பத்தில் ஒருவர் நிற்கவேண்டும் என வலியுறுத்தினோம். மதுரை, விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் நிறுத்த திட்டமிடுவோம். கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு ஏற்பாடு செய்யப்படுகிறது. தேர்தலுக்கு முன்னதாகவே தமிழகத்தில் 4 மண்டலத்தில் விஜயகாந்தின் புகழஞ்சலிக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

சரியான கூட்டணி அமையாவிடின் தனித்து நிற்கவும் தயங்க மாட்டோம். எங்கள் கட்சியிலும் செல்வாக்கு, பண பலம் படைத்தவர்கள் இருக்கின்றனர்கள். அவர்களை போட்டியிட வைப்போம். தலைவர் கட்சிக்கு புகழ் சேர்த்துள்ளார். நாங்கள் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும், எங்களது தலைவர் புகைப்படத்தை காட்டியே வாக்கு கேட்க முடியும். விஜயகாந்த்தின் மறைவுக்கு பிறகு அவரை பற்றிய நல்ல எண்ணம் போன்ற பல்வேறு தகவல்கள் மக்களை சென்றடைந்துள்ளன. இதன்மூலம் எங்களுக்கு அனுதாபம் கிடைக்கும் என்பதைவிட, இப்படியான நல்ல மனிதனை ஆதரிக்காமல் விட்டுவிட்டோமே என கருதி எங்களுக்கு அதிக வாய்ப்பளிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. நம்பிக்கையுடன் களம் காண்போம். எங்களது ஓட்டு சதவீதத்தை நிரூபிப்போம்'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x