Published : 08 Feb 2024 12:56 PM
Last Updated : 08 Feb 2024 12:56 PM
உதகை: உதகை லவ்டேல் காந்தி நகர் பகுதியில் கட்டுமான பணியின் போது பராமரிப்பு இல்லாத கழிப்பிட கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் இரு ஆண்கள் மற்றும் இரு பெண்கள் கவலைக்கிடமான நிலையில் உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணமாக அரசு அறிவித்துள்ளது. மேலும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், உதகை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சியர் மு.அருணா, காவல்துறை கண்காணிப்பாளர் பா.சுந்தரவடிவேல் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் அரசு அறிவித்த நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கினார். மேலும், அவரது சொந்த பணத்தில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கினார்.
அவர் கூறும்போது, “அரசு அறிவித்த நிவாரணம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்கள் வழங்கப்பட்டது. மேலும் தொழிலாளர் நலத் துறை சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மேலும் ரூ. 5 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினர் சில கோரிக்கைகள் விடுத்துள்ளனர். அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
பிரேதப் பரிசோதனை முடிவடைந்த நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அவரவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடல்கள் ஆம்புலன்ஸ்களில் ஏற்றப்பட்டு காந்திநகர் அனுப்பப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT