Published : 08 Feb 2024 12:22 PM
Last Updated : 08 Feb 2024 12:22 PM

“நிவாரணம் கேட்கவில்லை; உரிமையைத் தாருங்கள்”- நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் போராட்டம்

புதுடெல்லி: மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்தும், வெள்ள நிவாரணம் தராததை கண்டித்தும் நாடாளுமன்ற வளாக காந்தி சிலை முன்பு திமுக கூட்டணிக் கட்சி எம்.பி.,க்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய இடைக்கால பட்ஜெட்டை 2024 பிப்ரவரி 1-ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், “நாட்டில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்த பிறகு வரி வசூல் அதிகரித்திருப்பதாக நிதி அமைச்சர் பெருமைப்பட்டுக் கொள்கிறார். ஆனால் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை இந்த ஆண்டு வழங்குவது குறித்து எந்தவொரு அறிவிப்பு இல்லாமல் இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இதனால் இந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டுக்கு ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய வரிகள் மீது கூடுதல்வரிகள் மற்றும் மேல் கட்டணமாக சுமார் 7.5 லட்சம் கோடி ரூபாயினை மத்திய அரசு தொடர்ந்து வசூலித்து வருகிறது. இதனால் மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய பங்கை மத்திய அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. கூடுதல் வரி மற்றும் மேல் கட்டணங்களை மாநிலங்களுடன் பகிர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் மத்திய அரசு கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணாகச் செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது.

இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழகம் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பத்தாண்டு காலத்தில் பதினைந்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் சொல்லி இருக்கிறார். 2015-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டு, 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2024 வரைக்கும் கட்டுமானப் பணிகள் கூட நடக்காமல் கிடக்கிறதே... என்ன காரணம்? இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் அமைத்தவர்கள், தமிழகத்தில் மட்டும் அமைக்காமல் போனதற்கு என்ன காரணம்? தமிழகத்துக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை? தமிழக மக்கள் இளித்தவாயர்களா? பாஜகவுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இல்லை என்பதுதான் காரணமா?

தமிழ்நாட்டு மக்கள் நலனை முழுமையாகப் புறக்கணித்து, தமிழக வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து அளித்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் . இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள்” என்று கூறியிருந்தார்.

அதன்படி, இன்று நாடாளுமன்ற வளாக காந்தி சிலை முன்பு திமுக கூட்டணிக் கட்சி எம்பி.,க்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். டிஆர் பாலு, ஆ.ராசா, திருமாவளவன் உட்பட திமுக கூட்டணிக் கட்சி எம்பி.,க்கள் கருப்பு சட்டை அணிந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். கையில் பதாகைகளை ஏந்தியவாறு திமுக கூட்டணியின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பி.,க்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். பாஜக அல்லாத மாநிலங்களுக்கு நிதி தராமல் வஞ்சிக்கப்படுவதை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது போன்ற முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

இந்த போராட்டம் குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், “மிக்ஜாம் புயலும், பெருமழையும் தமிழ்நாட்டின் இரண்டு முனைகளைப் புரட்டிப் போட்டிருக்கிறது. விவசாயம் , வேலையிழப்பு , கால்நடைகள் இறப்பு , வாழ்விட இழப்பு என உயிரைப் பிடுங்கிச் சென்றது அந்தப் பேரிடர். ஆனால் ஒன்றிய அரசோ வாய்வார்த்தைகளைத் தவிர வேறொன்றையும் வழங்கவில்லை. ஒன்றிய அரசைக் கண்டித்து நாடாளுமன்ற காந்திசிலை முன்பு தமிழக எம் பிக்கள் ஆர்ப்பாட்டம். நாங்கள் நிவாரணம் கேட்கவில்லை - எங்களின் உரிமையைத் தாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x