Published : 08 Feb 2024 11:18 AM
Last Updated : 08 Feb 2024 11:18 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பதிவு செய்யப்படாத தங்கும் விடுதிகள் புற்றீசல் போல் அதிகரித்துள் ளதால், வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த விடுதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த உள்ளாட்சி அமைப்புகள் முடிவு எடுத்துள்ளன.
புதுச்சேரியில் தற்போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை முன் எப்போதையும் விட அதிகரித்துள்ளது. இதனால் நகரம், புறநகர் மற்றும் கடலோர கிராமங்களை ஒட்டி உள்ள இடங்களில் அங்கீகரிக்கப்படாத தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லங்கள் புற்றீசல் போல் அதிகரித்து வருகின்றன. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப் பால் பல குடியிருப்புகள், விதிகள் எதையும் பின்பற்றாமல் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.
இது குறித்து அதிகாரிகளிடம் விசாரித்த போது, மாற்றியமைக்கப்பட்ட குடியிருப்பு கட்டிடங்களில் ஒன்று அல்லது இரண்டு குடும்பங்கள் முதல் பெரிய குழுக்கள் வரை தங்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் பல தங்கும் இடங்கள், வர்த்தக உரிமத்தில் இல்லை. ஆனால், குடியிருப்பு வாசிகளுக்கான சலுகை அளவிலான மின் கட்டணம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை இவர்களும் பயன்படுத்துகின்றனர். வணிகப்பயன்பாடு அதிகரித்த போதிலும் அவர்களின் சொத்து வரி குடியிருப்புவாசிகளுக்கு உரியதாகவே உள்ளது. மேலும் விருந்தினர் மாளிகை கட்டிடங்களும் அதிகரித்துள்ளன. இதில் இன்னும் பல பதிவு செய்யப் படவில்லை என்றனர்.
இது போன்ற தங்குமிட வசதிகளுக்கு,விடுதிகள் நடத்துபவர்கள் ஆன்லைன் போர்ட் டல்களில் தங்களை பட்டியலிட்டுள்ளனர். விதிமுறைகளின் படி தங்கும் விடுதிகள், ஹோட்டல் மற்றும் சுற்றுலா துறையில் ஈடுபடுபவர்கள் உள்ளூர் நிர்வாகமான உள் ளாட்சி அமைப்பு, காவல்துறை, சுற்றுலா, தீயணைப்பு, தொழிலாளர் துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறைகளில் அனுமதி பெற வேண்டும். அதுபோல் பலரும் அனுமதிபெறாத சூழல் உள்ளது.
இது குறித்து சுற்றுலாத் துறையில் விசாரித்த போது, சுற்றுலா பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, புதுச்சேரியில் படுக்கை மற்றும் காலை உணவு தரும் ‘ஹோம் ஸ்டே' திட்டத்தை 2019-ல் சுற்றுலாத் துறை வெளியிட்டது. இத்திட்டம் வெளியான பிறகு 64 விண்ணப்பங்கள் வந்தன. அதில் 33 பேருக்கு உரிமம் தரப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் நகரின் மைய பகுதியான பெரிய கடை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், 6 பெரிய விருந்தினர் இல்லங்கள் அனுமதியின்றி செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புல் வார்டு மற்றும் நகரப் பகுதியை சுற்றியே பல சிறிய விடுதிகள் அனுமதி இன்றி செயல்படுவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். நகரப் பகுதிகளில் பல வீடுகள் தங்கும் விடுதிகளாக அனுமதி இன்றி மாற்றப்படுவதால், அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் தான் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். இரவில் அறிமுகமில்லாத நபர்களின் நடமாட்டம் அதிகரிப்பது அச்சத்தை ஏற்படுத்துவதாக குடியிருப்பு வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து எஸ்.எஸ்.பி நாக சைதன்யாவிடம் கேட்டதற்கு, ‘‘அனுமதியின்றி செயல்படும் ஹோட்டல்கள், விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி அதிகாரியி டம் காவல்துறை தெரிவித்துள்ளது. அனைத்து ஹோட்டல்களும் கட்டா யமாக இணைய போர்ட்டலில் பதிவு செய்யுமாறு வலியுறுத்துகிறோம். மேலும் ஹோட் டல்களில் பதிவுகளை பராமரிக்கவும், சிசிடிவி கேமராக்களை பொருத்தவும் தெரிவித்துள்ளோம்'' என்று தெரிவித்தார்.
புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமியிடம் கேட்டதற்கு, அனுமதி இன்றி நடத்தப்படும் இடங்களை கண்டறிய உள்ளாட்சி அமைப்பு விரைவில் கணக்கெடுப்பு நடத்தும். ஏனெனில் வருவாய் இழப்பு மட்டுமின்றி பதிவு செய்யப்படாத விடுதிகளினால் குடியிருப்பு வாசிகளுக்கு இடையூறு, போக்குவரத்து பிரச்சினை, சுற்றுலா பயணிகளால் பிரச்சினை ஆகியவை ஏற்படுகிறது. முன் பதிவு ஆப்பில், தங்கும் இடம் பற்றிய தவறான பதிவுகளை கூட அவர்கள் கொடுக்கலாம். அனுமதி உள்ளதா என்பதை கண்டறிய விரைவில் கணக்கெடுப்பு நடத்துவோம்'' என்று தெரிவித்தார். பல வீடுகள் தங்கும் விடுதிகளாக அனுமதி இன்றி மாற்றப்படுகின்றன. அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் பாதிக்கப் படுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT