Published : 08 Feb 2024 10:35 AM
Last Updated : 08 Feb 2024 10:35 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலில் வாங்கிய வாக்குகளைவிட, சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்குகள் குறைந்தது ஏன்? என சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற திண்டுக்கல் மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கட்சியின் மாவட்ட, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டனர். அமைச்சர் உதயநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில், கடந்த மக்களவைத் தேர்தலில் வாங்கிய வாக்குகளைவிட சட்டப்பேரவைத் தேர்தலில் ஏன் வாக்குகள் குறைந்தன. அதற்குக் காரணம் என்ன என்பது குறித்து கேட்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒருவரை ஒருவர் தங்களுக்குள் குறை சொல்லிக் கொண்டு இருக்காமல் அனைவரும் இணைந்து பணியாற்றி தொகுதியை வெல்ல வேண்டும்.
கட்சியினரிடையே உள்ள சொந்த விருப்பு வெறுப்புகளை 60 நாட்களுக்கு ஒதுக்கி வைத்து விட்டு தேர்தல் பணியைத் திறம்பட மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியது. திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் உள்ளதால், தேர்தல் பணியில் அதிகம் கவனம் செலுத்துவர் என்பதால் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் கடந்த முறை போல இந்த முறையும் திமுக வேட்பாளரே போட்டியிட அதிக வாய்ப்புள்ளது.
கூட்டணிக் கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியை ஒதுக்க வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையில், சென்னை சென்று திரும்பிய திமுக நிர்வாகிகள் உற்சாகத்துடன் தேர்தல் பணிகளைத் தொடங்கி உள்ளனர். பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் வீடு வீடாகச் சென்று அரசின் நலத் திட்ட உதவிகளை யார் யார் பெற்றுள்ளனர் என்ற பட்டியலைத் தயாரித்தும் வருகின்றனர். இப்பொழுதே திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து சிலர் தங்கள் முயற்சிகளையும் மேற்கொள்ளத் தொடங்கி விட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT