Published : 08 Feb 2024 10:16 AM
Last Updated : 08 Feb 2024 10:16 AM

கரூர் | அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

கரூரில் உள்ள அமைச்சர் வீட்டின் முன்னால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள் வந்த வாகனம்.

கரூர்: கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது அதிமுக ஆட்சி காலத்தில் 2011 - 2015-ம் ஆண்டு காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்தப்போது போக்குவரத்துக்கழகத்தில் பணி வாங்கி தருவதாக பணம் பெற்ற வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க கடந்த மே மாதம் உத்தரவிட்டது.

இதையடுத்து கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்கள் வீடுகள், அலுவலகங்கள், கல்குவாரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மே 26-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக கூறப்பட்டது.

அதனை தொடர்ந்து 10 நாட்களுக்கு பிறகு கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டில் ஜூன் 13ம் தேதி 5 கார்களில் வந்த 20க்கும் மேற்பட்ட அமாலக்கத்துறை அதிகாரிகள் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் சோதனை நடத்தினர்.

அமைச்சர் செந்தில்பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். அதன் பிறகு கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரர், உறவினர், நண்பர்கள், ஆதரவாளர்கள் வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை பல முறை சோதனை நடத்தினர்.

இந்நிலையில் கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டில் இன்று (பிப். 8ம் தேதி) கேரள பதிவெண் கொண்ட வாகனத்தில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 7.30 மணி முதல் 3 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த வீட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் பெற்றோர் வசித்து வருகின்றனர். ஏற்கெனவே அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் தற்போது மீண்டும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையின் போது துணை ராணுவ படையினரையோ, உள்ளூர் போலீஸாரையோ அழைத்து வரவில்லை. செந்தில்பாலாஜியின் பெற்றோரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை குறித்து தகவலறிந்த உள்ளூரைச் சேர்ந்த திமுகவினர் வீட்டு முன் கூடி நின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x