Published : 08 Feb 2024 08:45 AM
Last Updated : 08 Feb 2024 08:45 AM
கோவை: கோவை காட்டூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரி ( 51 ). இவர் பணியின் போது வாகன ஓட்டிகளை மரியாதை குறைவாக திட்டியதாக சமூக வலைதளத்தில் பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு இருந்தார். இது குறித்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ராஜேஸ்வரி புகார் அளித்தார்.
அதில்,‘‘நான் காந்தி புரம் டெக்ஸ்டூல் பாலத்தில் போக்கு வரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது வட வள்ளியை சேர்ந்த ஷர்மிளா என்பவர் தனது காரை போக்கு வரத்துக்கு இடையூறாக நிறுத்தி இருந்தார். இதனால் காரை அங்கிருந்து எடுக்கும் படி கூறினேன். ஆனால் அவர் காரை எடுக்காமல் என்னை வீடியோ எடுத்தார். இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினேன். இதையடுத்து, அவர் காரை அங்கிருந்து எடுத்துச் சென்று விட்டார்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் நான் வாகன ஓட்டிகளை மரியாதை குறைவாக பேசியதாக அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். ஆனால் உண்மையில் நான் அவரை திட்டவில்லை. என்னை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், போலியான செய்தியை பரப்பி வீடியோ வெளியிட்ட ஷர்மிளா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.
அதன் பேரில், சைபர் கிரைம் போலீஸார் ஷர்மிளா மீது மிரட்டல், பெண்ணை அவமதித்தல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஷர்மிளா காந்திபுரம் - சோமனூர் இடையே இயக்கப்படும் தனியார் பேருந்தில் ஓட்டுநராக சில மாதங்கள் பணி புரிந்தார். அவர் கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக அறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT