Published : 08 Feb 2024 05:21 AM
Last Updated : 08 Feb 2024 05:21 AM
உதகை: உதகை அருகே பங்களா கட்டுமான பணியின்போது, அருகில் இருந்த பொதுக்கழிப்பிடம் இடிந்து விழுந்ததில், மண்ணில் புதைந்து 6 பெண்கள் உயிரிழந்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே லவ்டேல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு பங்களாகட்டும் பணி கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நடந்து வந்தது. உதகை காந்தி நகர் மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் 15-க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர்.
பங்களா கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, பங்களாவின் பின்புற நிலத்தை தோண்டி, சீரமைக்கும் பணியில் கட்டுமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று காலை வழக்கம்போல பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், பகல் 12 மணி அளவில் அப்பகுதியில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் அமர்ந்திருந்த இடத்தின் மேல் பகுதியில் இருந்த, உதகை நகராட்சியின் பொதுக் கழிப்பிடக் கட்டிடம் திடீரென இடிந்து,கீழே அமர்ந்திருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்தனர்.
அக்கம்பக்கத்தினர் அளித்ததகவலின்பேரில், உதகை தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் விரைந்து வந்து, மீட்புபணியில் ஈடுபட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் சம்பவ இடத்துக்கு வந்து, மீட்பு பணியை துரிதப்படுத்தினார்.
பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் இடிபாடுகளை அகற்றி, இடிபாடுகளில் சிக்கித் தவித்தவர்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 2 மணி நேரம் மீட்பு பணி நடைபெற்றது.
இந்த விபத்தில் உதகை காந்தி நகரை சேர்ந்த தொழிலாளர்கள் சங்கீதா(35), ஷகீலா(30), பாக்யா(36), உமா(35), முத்துலட்சுமி(36), ராதா (38) ஆகியோர் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட மகேஷ் (23), சாந்தி (45),ஜெயந்தி (56), தாமஸ் (24) ஆகியோர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
4 பேர் கைது: விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய உதகை போலீஸார், அஜாக்கிரதையாக தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியதாக கட்டிட ஒப்பந்ததாரர் மோகன் மீது வழக்கு பதிவு செய்தனர்.தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்காத நில உரிமையாளர் பிரிட்ஜோ, ஒப்பந்ததாரர் பிரகாஷ், மேற்பார்வையாளர் ஜாகீர் அஹமத், மேஸ்திரி ஆனந்தராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
‘உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், அனுமதியற்ற கட்டிடங்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தி, உதகை காந்தி நகர் பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால், 20-க்கும் மேற்பட்டோர் சேரிங்கிராஸ் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.
முதல்வர் இரங்கல்: முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘உதகை விபத்தில் 6 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த துயர செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT