Published : 07 Feb 2024 09:03 PM
Last Updated : 07 Feb 2024 09:03 PM
மதுரை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநதி பெயரில் மதுரையில் திறந்து வைத்த கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம், திறப்பு விழா கண்ட 6 மாதத்தில் மழைக்கு ஒழுகுகிறது. நூலகத்தின் உள்ள சுவர்கள் பல இடங்களில் பெயர்ந்து விழுவதோடு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ரேக்குகள் துருப்பிடிக்க ஆரம்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, அண்ணாவின் நூற்றாண்டு விழாவை போற்றும் வகையில் சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டி திறந்தார். இதுபோன்ற பிரமாண்ட நூலகம், தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாததால் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள், மாணவர்கள், தமிழ் அறிஞர்கள் அதுபோன்ற நூலகம் தங்கள் பகுதியிலும் அமையாதா? என ஏக்கமடைந்தனர். அவர்கள் ஏக்கத்தை நிறைவேற்றும்வகையில் மறைந்த முன்னாள் முதல் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது பெயரில் அவரது மகனும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மதுரை நத்தம் சாலையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் கட்டினார்.
இந்த நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை காட்டிலும் பிரமாண்டமான கட்டிட அமைப்புடன், அரை வட்ட வடிவில் முழுவதும் டிஜிட்டல் மயமான நூலகத்தை திறந்து வைத்தார். இந்த நூலகத்தில் பல்துறைகளை சேர்ந்த நூலகள், போட்டித்தேர்வாளர்கள், மாணவர்கள், தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்களுக்கான புத்தகங்கள் முதல், சிறு குழந்தைகளுக்கான புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன. மதுரையில் அமைந்த நூலகம், பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், பொதுமக்கள் இந்த நூலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், திறந்து வைத்த கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம், திறப்பு விழா கண்ட 6 மாதத்தில் மழைக்கு ஒழுக ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் மதுரையில் பெய்த மழைக்கு நூலகத்துக்கு மேலே காண்போர் கவரும் குடைபோன்று அமைக்கப்பட்டிருந்த பகுதியில் மழைநீர் ஒழுகியது. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அவசரம் அவசரமாக மேற்கூரை மேலே ஒழுகிய இடங்களில் ஷீட் போட்டு ஒட்டி தற்காலிகமாக சரி செய்துள்ளனர். நூலகத்துக்கு உள்ளே மின்சார விளக்குகள் பொறுத்தப்பட்ட இடங்களில் இருந்தும் மழைநீர் சொட்டு சொட்டாக மழைநீர் ஒழுகியுள்ளது.
இதனால், புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேக்குகள் தற்போது துருப்பிடிக்க ஆரம்பித்துள்ளன. சுவர்களில் மழைநீர் வடிந்து ஆங்காங்கே நூலக அறைகளில் சிமெண்ட் பூச்சிகள் உதிர்ந்து விழ ஆரம்பித்துள்ளன. சில இடங்களில் தூண்கள் உள்ள இடங்களிலே இந்த சிமெண்ட் பூச்சி உதிர்ந்துள்ளதால் அதில் விரிசலா? அல்லது பூச்சா? என நூலகர்கள் அச்சமடைந்துள்ளனர். நூலகப் பிரிவுகளின் கதவுகள் சிலவும் தற்போதே பழுதடைய ஆரம்பித்துள்ளன. மால்கள், தியேட்டர்களில் இருப்பதை போன்று நூலகத்தின் தரைத்தளதில் இருந்த நூலகத்தின் மேல் பகுதிக்கு செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள எக்ஸலேட்டர் தற்போது வரை இயக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
அதனால், எந்த நோக்கத்திற்காக இந்த எக்ஸலேட்டர் அமைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. இதுகுறித்து நூலகர்களிடம் கேட்டால், எக்ஸ்லேட்டர்களில் செல்லும்போது மக்கள் பாதுகாப்பு இல்லாமல் செல்பி எடுப்பதாகவும், அதனால் அதை பயன்படுத்தாமல் பூட்டி வைத்துள்ளதாகவும் கூறுகிறார்கள். கண்காணித்து முறையாக அதை செயல்படுத்த நூலக நிர்வாகதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நூலகத்தின் அண்டர் கிரவுண்ட் பார்க்கிங் பகுதியில் மழை பெய்யும் போது தண்ணீர் தேங்குவதால் நூலகர்கள், மக்கள் வாகனங்களை மழைக்காலத்தில் எடுக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். தற்போது நூலகத்தின் பின்பகுதியில் கட்டுமான குறைபாடுகளால் சிமெண்ட் பூச்சி பெயர்ந்ததால் தற்போது அவசரம் அவசரமாக பராமரிப்பு பணிகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவசர அவசரமாக கலைஞர் நூலகத்தை கட்டி திறந்ததால் தரமான முறையில் கட்டுமானப்பணி நடக்கவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாநகராட்சி மேயரை தவிர உள்ளூர் அமைச்சர்கள், ஆட்சியர் மற்றும் அதிகாரிகள், முதல்வர் இந்த நூலகத்தை திறந்து வைத்தபிறகு எட்டிப்பார்க்கவில்லை. அவர்களும் அவ்வப்போது இந்த நூலகத்தை நேரடியாக வந்து பார்வையிட்டிருந்தால் இதுபோன்ற குறைபாடுகளை வெளிச்சத்துக்கு வராமல் சரிசெய்திருக்கலாம். கலைஞர் நூலகத்தில் கட்டுமான குறைபாடுகள் மட்டுமில்லாது புத்தகங்களை பராமரிப்பது, வாசகர்கள் புத்தகங்களை எடுத்து பராமரிப்பது வரை டிஜிட்டல் குறைபாடுகளும் உள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புக் கவனம் எடுத்து, கலைஞர் நூலகத்தை தனிக்குழு அமைத்து ஆய்வு செய்து குறைபாடுகளை உடனடியாக சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதுகுறித்து நூலகர்களிடம் கேட்டபோது, ‘‘ஒரு புது திட்டம், கட்டிடம் தொடங்கினால், அதில் ஆரம்பத்தில் சில குறைபாடுகள் வரதான் செய்யும். அதை படிபடியாக சரிசெய்து விரைவில் திறம்பட செயல்பட வைக்க முடியும். அதுபோன்ற சிறுசிறு குறைபாடுள்தான் கலைஞர் நூலகத்தில் உள்ளன, ’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT