Published : 07 Feb 2024 08:18 PM
Last Updated : 07 Feb 2024 08:18 PM
புதுடெல்லி: மக்களவையில் நடந்த பொதுத் தேர்வுகள் நேர்மையற்ற வழிமுறை தடுத்தல் மசோதா 2024 மீதான விவாதித்தின்போது பேசிய திமுக எம்.பி கதிர் ஆனந்த், தாய்மொழியில் தேர்வுகளுக்கு வாய்ப்பளித்தால் தவறுகள் நடைபெறாது என்று கூறினார்.
நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்பி கதிர் ஆனந்த், பொதுத் தேர்வுகள் நேர்மையற்ற வழிமுறை தடுத்தல் மசோதா 2024 மீது உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “இந்த மசோதா முழுவதும் தேர்வு முறைகேடுகள் செய்வோரை எப்படி தண்டிப்பது, சிறையில் அடைப்பது அபராதம் விதிப்பது குறித்து மட்டுமே கருத்தில் கொண்டுள்ளதே தவிர இந்த முறைகேடுகளைத் தடுப்பது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. இத்தகைய குற்றங்கள் நிகழக் காரணம் என்ன? யார் இதைச் செய்கின்றனர். எதற்காக இப்படி செய்கின்றனர். பணத்துக்காக கும்பலாக ஒன்று சேர்ந்து மோசடி செய்கிறார்களா? அதற்கான தீர்வுகளை முன்வைக்க இந்த மசோதா தவறிவிட்டது.
ஒரு முறைகேடு நடப்பதற்கான மூலக்காரணத்தை அறிந்து தீர்வுகள் காண்பது அரசின் கடமையாகும். தேர்வர்கள் தம் தாய் மொழியில் தேர்வுகளை எழுத வாய்ப்பு அளித்தால் இந்த முறைகேடுகள் நடக்காமல் தடுக்க முடியும். ஆனால் மத்திய அரசு தனது இந்தி மொழி கொள்கையில் பிடிவாதமாக உள்ளது.இந்த தேர்வுகள் இந்தியில் தவிர்த்து வேறு எந்த இந்திய மொழிகளிலும் எழுத முடியாது போனதும் ஒரு காரணம்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, இன்னும் பல மாநிலங்களில் மாநில கல்வி முறையில் பயின்றோர் தம் மாநில மொழிகளில் எழுத அனுமதித்தால் இந்த தேர்வு முறைகேடுகள் நிகழாமல் தடுக்கலாம். இந்தி மொழியில் எழுத வேண்டும் என்றால் அவர்களால் சரியாக எழுத முடிவதில்லை. மேலும், மத்திய அரசு இதற்காக ஒரு முழுமையான திட்டம் தயாரிக்க வேண்டும். மாநில அரசுகளுடன் இணைந்து அத்திட்டத்தை செயலாற்ற வேண்டும். தேர்வர்களை ஈர்த்து அவர்களுக்கு நுழைவுத் தேர்வுகள் போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கு எப்படி தயாராக வேண்டும்.
ஆனால், இதையெல்லாம் இந்த அரசு செய்ததா? இல்லை. நாட்டில் யுபிஎஸ்சி அல்லது ரயில்வே பணி வேலைக்கான அல்லது எந்த வேலைக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்த தேர்வர்களுக்கு நல்ல முறையில் பயிற்சி தருவது மிக அவசியம். ஆனால் இதெல்லாம் மத்திய அரசு செய்ததா? என்றால் எதுவும் செய்யவில்லை. ஆனால் குற்றம் செய்தவர்களை தண்டிப்பதில் மட்டும் கவனம் செலுத்துகிறது. இதுதான் இந்த மசோதாவிலுள்ள குறை.
மாநிலங்கள் மேற்கொண்டு வரும் தேர்வு பயிற்சி முறைகள் திறன் மேம்படுத்துதல் குறித்து பேசும் போது தமிழகத்தில் செய்யப்படுவதை கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு யுபிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகள் எழுதும் தேர்வர்களுக்கு இத்தேர்வுகளில் சிறப்பாக எழுத பல உதவித் திட்டம் வகுத்துள்ளது.
யுபிஎஸ்சி தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு தலா ரூ.7000 வரை செலவு செய்து சிறப்பு பயிற்சி மையங்கள் மூலமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. நேர்முகத் தேர்வுக்கு செல்லும்போது ரூ.25,000 வழங்கி ஊக்கப்படுத்தி உறுதுணையாக இருக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இன்னொரு முக்கியமான திட்டம் "நான் முதல்வன்" திட்டமாகும். நான் முதல்வன் என்பது நான் வெற்றியாளர் என்பதை குறிக்கும் சிறப்பு திறன் மேம்பாட்டு திட்டமாகும். இத்திட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் படித்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு, நகரத்து மாணவர்களுக்கு இணையாக அவர்களை மாற்ற வழிவகை செய்கிறது.
இதனால், இத்தேர்வர்கள் தாழ்வு மனப்பான்மை இன்றி தைரியமாக தன்னம்பிக்கையுடன் போட்டித் தேர்வுகளை அணுக முடியும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த திறன்களை மேம்படுத்தி மொழித் திறனை வளர்த்து போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் தேர்வர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதுவே இத்திட்டத்தின் வெற்றி ஆகும்.தேர்வுகளில் முறைகேடுகள் நிகழாமல் தடுக்க தேர்வர்களின் மொழிப் பிரச்சினையை அகற்ற மத்திய அரசு தீர்க்க வேண்டும். முறைகேடுகளைத் தடுக்கவும் தவறிழைத்தவர்களை கண்டுபிடித்து விசாரித்து தண்டிக்கவும் தேசிய அளவிலான உயர் அதிகாரமிக்க குழு ஏற்படுத்த இந்த மசோதா பரிந்துரைக்கிறது.
ஆனால், இந்த உயர் அதிகார குழுவில் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் இடம் பெறுகின்றனரா? இதில் மாநில அரசின் பங்கு என்ன? என்பது குறித்து இந்த மசோதாவில் எதுவும் கூறப்படவில்லை. இதனால் இம்மசோதா சட்டமான பிறகு இச்சட்டத்தை பயன்படுத்தி ஒருசிலர் பழிவாங்குவதையோ பாரபட்சமாக நடப்பதையோ தடுக்க முடியாது.எனவே இந்தக் குழுவில் மாநில அரசுக்கு பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். மாநில அரசிடம் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். இல்லையேல் இது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
இந்த விஷயத்தில் மாநிலங்களை இணைத்து செயல்பட வேண்டும். இந்த மசோதாவில் திருத்தங்கள் செய்திட பரிந்துரைக்கப்பட வேண்டும். மத்திய அரசு இந்த விஷயத்தில் மாநிலத்தின் குரல்களுக்கு மதிப்பளித்து மாநிலங்களோடு இணைந்து பணியாற்றி போதுமான நிதி, நேரம் செலவிட்டு வருங்கால இளைய சந்ததியினர்க்கு உறுதுணையாக நின்று ஊக்கமளிக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT