Published : 07 Feb 2024 06:16 PM
Last Updated : 07 Feb 2024 06:16 PM

2 முறை பட்ஜெட்டில் அறிவிச்சாச்சு... திருச்சியில் எப்பத்தான் வார்டு அலுவலகம் கட்டுவீங்க ஆபீசர்?

திருச்சி: திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் வார்டு அலுவலகம் கட்டப்படும் என பட்ஜெட்டில் 2 முறை அறிவிக்கப்பட்டும் இதுவரை நிறைவேற்றப்படாததால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

திருச்சி மாநகராட்சியில் 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் மாமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022- 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் தலா ரூ.10 லட்சம் மதிப்பில் பொது நிதியிலிருந்து வார்டு அலுவலகம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன்பின், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2023- 2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் தலா ரூ.25 லட்சம் மதிப்பில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து பன்நோக்கு அலுவலகம் கட்டப்படும் என அறிவிப்பு வெளியானது.

இந்த அலுவலகத்தில், கவுன்சிலர் அறை, துப்புரவு மேற்பார்வையாளர் அறை, ஸ்டோர் ரூம், கழிப்பறை போன்றவை கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. தங்களது கோரிக்கைகள் தொடர்பாக கவுன்சிலர்களை சந்திக்க இந்த அலுவலகங்கள் உதவிகரமாக இருக்கும் என்பதால் இத்திட்டத்தை பொதுமக்கள் வரவேற்றனர்.

ஆனால், அதன்பிறகு மேலும் ஓராண்டாகியும் இன்னும் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில், அடுத்த நிதியாண்டுக்கான மாநகராட்சியின் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டிலாவது இந்தத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என கவுன்சிலர்களும், பொதுமக்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: வார்டு அலுவலகம் இருந்தால் பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பாக கவுன்சிலர்களை சந்திக்க ஏதுவாக இருக்கும்.

ஆனால், இதற்கு முன்னுரிமை கொடுக்காமல் ஆடம்பர, அலங்கார விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து மாநகராட்சி நிர்வாகம் நிறைய செலவு செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வெறும் அறிவிப்புடன் மட்டுமே இத்திட்டம் உள்ளது. இதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை என்ன செய்தார்கள் என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் க.சுரேஷ் கூறியது: வார்டு அலுவலகம் கட்டப்பட்டால், கவுன்சிலர் அங்கு இல்லை என்றாலும், பொதுமக்கள் தங்களது குறைகளை அங்குள்ள புகார் பதிவு புத்தகத்தில் பதிவு செய்துவிட்டு செல்ல முடியும். எனவே, இந்த ஆண்டாவது இத்திட்டத்தை நிறைவேற்ற மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து மாநகர மேயர் மு.அன்பழகனிடம் கேட்டபோது, ‘‘சில பிரச்சினைகளால் வார்டு அலுவலகம் கட்டும் திட்டத்தை செயல்படுத்துவது தள்ளிப்போனது. இப்போது வார்டு அலுவலகம் கட்டும் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள விரைவில் டெண்டர் விடப்பட உள்ளது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x