Published : 07 Feb 2024 03:49 PM
Last Updated : 07 Feb 2024 03:49 PM

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் நிறுத்தக் கூட இடமில்லை: தொடரும் ‘பார்க்கிங்’ பிரச்சினை

சிகிச்சை அரங்குகளுக்கு செல்லும் வழியில் நிறுத்தப்பட்டுள்ள மருத்துவமனை ஊழியர்களின் வாகனங்கள். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் விடுவதற்கு கூட வழியில்லாமல் ‘பார்க்கிங்' பிரச்சினை தீராத தலைவலியாக உருவெடுத்துள்ளது. அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் 250 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதுதவிர பட்ட மேற்படிப்பு, சிறப்பு பட்ட மேற்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளும் உள்ளன. இந்த படிப்புகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கிறார்கள். 15 ஆயிரம் வெளிநோயாளிகள், 3,500 உள் நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள்.

600-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள். செவிலி யர்கள், மருத்துவப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். ஆனால் இவ்வளவு பிரம்மாண்டமான மருத்துவமனையில் முறையான பார்க்கிங் வசதி இல்லாதது தீராத குறையாகவே நீடிக்கிறது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் பனகல் சாலையில் தங்களது வாகனங்களை நிறுத்துகின்றனர். இதில் அவ்வப்போது வாகனங்கள் திருடு போவதாகவும் புகார் எழுந்துள்ளது.

மருத்துவமனைக்கு விபத்து, மகப்பேறு அவசரகால சிகிச்சைக்கு நோயாளிகளை ஏற்றிவர 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் உள்ளன. இவற்றை நிறுத்தக் கூட இட வசதியில்லை. மேலும், கோரிப்பாளையம் அவசர சிகிச்சைப் பிரிவு முன் ஆம்புலன்ஸ்களை நிறுத்தி திருப்புவதற்கு கூட இடமில்லை.

அரசு ராஜாஜி மருத்துவமனை அவசர சிகிச்சை மையம் முன் நிறுத்தப்பட்டுள்ள
ஆம்புலன்ஸ்களால் ஏற்பட்டுள்ள நெரிசல்.

மருத்துவர்கள் வழக்கமாக கார்களை நிறுத்தும் மருத்துவமனை வளாக இடங்களில், மற்ற பணியாளர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்த காவலாளிகள் அனுமதிப்பதில்லை. அதனால் அவர்கள் மருத்துவமனை சந்துகளில் தங்களது வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதன் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் ஸ்ட்ரெச்சர்களை கூட கொண்டு செல்ல முடியவில்லை.

மருத்துவர்களின் வாகனங்களை நிறுத்த மட்டும் அக்கறை காட்டும் மருத்துவமனை நிர்வாகம் பிற நோயாளிகள், பணியாளர்கள் வாக னங்களை பற்றி கண்டுகொள்வதில்லை. தற்போது கோரிப்பாளையம் பகுதியில் புதிதாக 7 மாடி டவர் பிளாக் கட்டிடம் பார்க்கிங் வசதியில்லாமல் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிட வரைபடம் தயாராகும்போதே இப்பிரச்சினை எழுந்தது.

ஆனால் அப்போதைய டீனிடம் முறையாக கலந்தாலோசிக்காமல் உயர் அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் கட்டிடத்தை கட்டி முடித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையில் அமைச்சர்கள், ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மருத்துவமனைக்கு வரும்போது மட்டும் அவர்களது வாகனங்களை நிறுத்த வசதி செய்து கொடுத்து விடுகின்றனர். இதனால் அவர்களுக்கு மற்ற சாமானியர்கள் படும் சிரமம் தெரிவதில்லை.

அப்படியே உள்ளூர் அமைச்சர்களிடம் பார்க்கிங் பிரச்சினையை அரசு மருத்துவர்கள் கொண்டு சென்றாலும், அது சுகாதார அமைச்சர் துறை என நழுவி விடுகின்றனர். மாவட்ட ஆட்சியர் பார்க்கிங் விவகாரத்தில் நேரில் ஆய்வு செய்து உரிய ஆலோசனைகளை வழங்கலாம்.

ஆனால், அவரும் இதை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மொத்தத்தில் மருத்துவமனை பார்க்கிங் விவகாரத்துக்கு அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் யாரும் தீர்வுகாண முன்வராததால் மருத்துவமனை பணியாளர்கள், நோயாளிகளின் சிரமம் தொடர்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x