Published : 07 Feb 2024 03:44 PM
Last Updated : 07 Feb 2024 03:44 PM
சென்னை: “பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட ஒரு வேட்டியை, கோவையில் உள்ள ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் கொடுத்து சோதனை செய்து பார்த்ததில், இவர்கள் மக்களுக்கு கொடுத்த வேட்டியில் 78 சதவீதம் பாலியஸ்டர் வெறும் 22 சதவீதம் மட்டுமே பருத்தி இருப்பது தெரியவந்துள்ளது. உற்பத்தி செலவைக் குறைத்துவிட்டு, பெரிய அளவில் ஊழல் செய்திருக்கிறார்கள்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “நேற்றைய தினம், ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி "என் மண் என் மக்கள்" பயணத்தின்போது, தமிழக கைத்தறித் துறை அமைச்சர் காந்தியின் விஞ்ஞானப்பூர்வமான புதிய ஊழல் ஒன்றை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தினோம்.அமைச்சர் காந்தியின் பெயருக்கும் அவரது செயல்பாடுகளுக்கும் பொருத்தமே கிடையாது. நெசவுத் தொழிலாளர்களிடம் வேட்டி, புடவை கொள்முதலுக்கு கமிஷன் கேட்பதால் கமிஷன் காந்தி என்றழைக்கப்படும் இவர், பொங்கல் தொகுப்பில் இலவச காட்டன் வேட்டி சேலை வழங்குவதிலும் ஊழல் செய்திருக்கிறார். விஞ்ஞானத் திருட்டில் திமுகவை மிஞ்ச இந்த உலகத்திலேயே ஆள் கிடையாது.
வழக்கமாக வேட்டி நெசவு செய்ய பருத்தி நூல் மட்டுமே பயன்படுத்தப்படும். இந்த ஆண்டு பருத்தி நூல் குறைவாகவும் பாலியஸ்டர் நூல் அதிகமாகவும் பயன்படுத்தி நெசவு செய்துள்ளனர். கிலோ ரூ.320 வரை விற்கப்படும் பருத்தி நூலை வாங்காமல், அதில் பாதி விலையான ரூ.160-க்கே கிடைக்கும் பாலியஸ்டர் நூலில் வேட்டி தயாரித்து மக்களை ஏமாற்றி உள்ளனர்.
பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட ஒரு வேட்டியை, கோவையில் உள்ள ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் கொடுத்து சோதனை செய்து பார்த்ததில், இவர்கள் மக்களுக்கு கொடுத்த வேட்டியில் 78 சதவீதம் பாலியஸ்டர் வெறும் 22 சதவீதம் மட்டுமே பருத்தி இருப்பது தெரியவந்துள்ளது. உற்பத்தி செலவைக் குறைத்துவிட்டு, பெரிய அளவில் ஊழல் செய்திருக்கிறார்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார். அத்துடன் கோவை ஜவுளி ஆராய்ச்சி மைய சோதனை முடிவுகளையும் இணைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT