Published : 07 Feb 2024 03:42 PM
Last Updated : 07 Feb 2024 03:42 PM
ஓசூர்: ஓசூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால், உள்நோயாளிகள் சிரமத்தைச் சந்திக்கும் நிலையுள்ளது. மேலும், ஓட்டுநர் இல்லாததால், ஆம்புலன்ஸ் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஓசூரில் சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வடமாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
குறைந்த வருவாயில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மருத்துவச் சிகிச்சை பெற மூக்காண்டப்பள்ளியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையைப் பயன்படுத்தி வருகின்றனர். ஓசூர் பகுதியில் பல லட்சம் தொழிலாளர்கள் உள்ள நிலையில் இஎஸ்ஐ மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளன.
இதனால், பல நாட்கள் உள் நோயாளிகள் சிகிச்சை பெற இடவசதியின்றி தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் நிலையுள்ளது. இதுபோல, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையுள்ளது. எனவே, இம்மருத்துவமனையை மேம்படுத்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகள் சிலர் கூறியதாவது: இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஓட்டுநர் இல்லாததால் நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
போதிய மின் விளக்கு வசதியில்லாததால், மருத்துவமனை வளாகத்துக்குள் இரவு நேரங்களில் சிலர் மது அருந்தும் நிலையுள்ளது. எனவே, கூடுதல் மருத்துவர்களை நியமித்து உயர் சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
33 ஆண்டுகளாக மேம்பாடு இல்லை மருத்துவமனை ஊழியர்கள் வேதனை: இஎஸ்ஐ மருத்துவமனை ஊழியர்கள் சிலர் கூறியதாவது: இம்மருத்துவமனை கடந்த 1991-ம் ஆண்டு தொடங்கியபோது உள்நோயாளிகள் சிகிச்சை பெற 50 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. அப்போது, மருத்துவமனையைப் பயன்படுத்தும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
தற்போது, 3 லட்சம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என சுமார் 5 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர். மருத்துவமனை தொடங்கப்பட்டபோது இருந்த வசதிகள் தான் இன்று வரை தொடர்கிறது. கட்டிடங்கள் கட்டி 33 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால், கட்டிடங்கள் சேதமாகி உள்ளன. நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் இல்லை.
மருத்துவமனை முன்புள்ள சாலையில் விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இதனால், சாலையின் உயரம் உயர்ந்து, மருத்துவமனை தாழ்வான பகுதியாக மாறியுள்ளது. மேலும், போதிய கால்வாய் வசதியில்லாததால், மழை நேரங்களில் மருத்துவமனை வளாகத்தைச் சுற்றி மழை நீர் சூழ்ந்து விடுகிறது.
இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டி, மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT