Last Updated : 07 Feb, 2024 03:37 PM

2  

Published : 07 Feb 2024 03:37 PM
Last Updated : 07 Feb 2024 03:37 PM

“புதுச்சேரியில் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றிக்கு என்.ஆர்.காங்கிரஸார் பணியாற்ற வேண்டும்” - ரங்கசாமி

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி | கோப்புப் படம்

புதுச்சேரி: “மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றிக்கு முழு மனதோடும், பலத்தோடும் பணியாற்றி வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி அறிவுறுத்தினார்.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 14-ம் ஆண்டு தொடக்க விழா, புதுச்சேரியில் அக்கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி கட்சி கொடியேற்றினார். தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள சத்குரு அப்பா பைத்தியம் சாமிகள் உருவப் படத்துக்கும், காந்தி, காமராஜர் படங்களுக்கும் முதல்வர் ரங்கசாமி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து தொண்டர்களுக்கு லட்டு வழங்கி அவர் பேசியது: "புதுச்சேரி மக்களின் நலன், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவே என்.ஆர். காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. இந்த எண்ணத்தை ஏற்கெனவே நாம் ஆட்சியிலிருந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ளோம். தற்போது மீண்டும் கூட்டணி கட்சியுடன் சேர்ந்து வாக்கு கேட்டு ஆட்சியில் அமர்ந்துள்ளோம். கடந்த கால காங்கிரஸ் ஆட்சி எப்படி செயல்பட்டது என்பதை எல்லோரும் அறிவீர்கள். ஏற்கெனவே நடைமுறையில் இருந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. புதிய திட்டங்களையும் கொண்டுவரவில்லை. நிர்வாகமும் சீர்கெட்டு புதுச்சேரியின் வளர்ச்சியே பாதிக்கப்பட்டது.

இதையடுத்து ஜனநாயக ரீதியாக பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி ஆசியோடும், புதுச்சேரியின் வளர்ச்சிக்கு நல்ல நிர்வாகத்தை சிறப்பாக செய்துள்ளோம். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முடக்கப்பட்ட, நிறுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் மீண்டும் செயல்படுத்தி வருகிறோம். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வாழ்வாதாரத்தை உருவாக்கியுள்ளோம். நிர்வாகத்தை சீரமைத்து புதிய உத்வேகத்தோடு செயல்படுத்துகிறோம்.

காங்கிரஸ் ஆட்சி மத்திய அரசோடு நல்ல உறவு இல்லாத நிலையில் இருந்தது. இதனால்தான் மாநில வளர்ச்சி பாதிக்கப்பட்டது. ஆனால், நாம் பொறுப்பேற்றவுடன் உள் கட்டமைப்பை மேம்படுத்த அதிக அக்கறை எடுத்துள்ளோம். நிறுத்தப்பட்ட லேப் டாப் திட்டம் தொடங்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மதிய உணவோடு மாலை சிற்றுண்டி தருவோம் என கூறியிருந்தோம். விரைவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கப்படும். பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத் தொகை, குடும்ப பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம், சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் என பல புதிய திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளோம்.

இதுவரை 50 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 மாத உதவித் தொகை வழங்கப்படுகிறது. அறிவித்தபடி மீதமுள்ள 20 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கும் நிதியுதவி அளிக்கப்படும். கட்சியின் நோக்கமே மாநில அந்தஸ்து பெறுவதுதான். மத்திய அரசு கண்டிப்பாக தரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதற்காகத்தான் பிரதமரை சந்திக்கும் போதும், கடிதம் மூலமும் மாநில அந்தஸ்து வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

கட்சியும் நன்றாக வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அரசு பணியிடங்கள் அனைத்தும் காலியாக இருந்தது. இதனால் துறைகளே செயல்பட முடியாத நிலை இருந்தது. தற்போது எந்த முறைகேடுகளும் இன்றி, யாரும் குறைசொல்ல முடியாத வகையில் எல்டிசி, யூடிசி, காவல், வருவாய், சுகாதாரத் துறை என அரசு துறை காலி பணியிடங்களை தொடர்ந்து நிரப்பி வருகிறோம். இன்னும் பல பணியிடங்களை நிரப்ப உள்ளோம். என்றார்.

மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றிக்கு முழு மனதோடும், பலத்தோடும் பணியாற்றி வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். கட்சி ஆட்சி அமைந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். மாநில வளர்ச்சிக்காக என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பாடுபட்டுள்ளது. இதையெல்லாம் மக்களிடம் எடுத்துக் கூறி என்.ஆர்.காங்கிரஸார் தேர்தல் பணியாற்ற வேண்டும்.

கட்சியில் 5 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்படும். அந்தக் குழுவுக்கு ஆலோசனை கூற 10 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். கட்சியில் அமைப்புகளும் விரைவில் அறிவிக்கப்படும். அடுத்தும் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி புதுச்சேரியில் மலர வேண்டும். அதற்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும். அரசுக்கு உறுதுணையாக இருக்கும் பிரதமருக்கும், மத்திய அமைச்சர்களுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் ரங்கசாமி.

இவ்விழாவில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சட்டப்பேரவை துணைத் தலைவர் ராஜவேலு, என்.ஆர். காங்கிரஸ் செயலாளர் ஜெய பால் மற்றும் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x