Published : 07 Feb 2024 03:30 AM
Last Updated : 07 Feb 2024 03:30 AM

தண்டவாளத்தை கடக்க தவிக்கும் ராட்டின கிணறு மக்கள்: 7 ஆண்டாக கிடப்பில் கிடக்கும் சுரங்கப்பாதை பணி

செங்கல்பட்டு ராட்டின கிணறு பகுதியில் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்லும் மக்கள்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ராட்டின கிணறு பகுதியில் 7 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று 10 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ராட்டின கிணறு பகுதியில் அமைந்துள்ள செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் ரயில்வழித்தடத்தில், கடவுப்பாதை ஒன்று அமைந்துள்ளது. இது அடிக்கடி மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, ரயில்வே தண்டவாளத்தை வாகனங்கள் கடந்து செல்ல மேம்பாலமும் மற்றும் பாதசாரிகள் கடந்துசெல்ல சுரங்கப் பாதையும் கட்ட 2012-ம்ஆண்டு அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு, 2014-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு விடப்பட்டது.

இந்நிலையில், சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டு 2017-ம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது. 60 சதவீதம் பணிகளை ரயில்வே நிர்வாகம் முடித்தது. இன்னும் முக்கிய பணிகளை ரயில்வே நிர்வாகம் தொடங்கவில்லை. இதனால் நெடுஞ்சாலைத் துறையினர் தரப்பில் பணிகளை தொடங்காமல் உள்ளனர்.

இதன் காரணமாக மேலமையூர், வல்லம், அம்மணம்பாக்கம், பட்ரவாக்கம், குண்ணவாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தண்டவாளத்தை கடந்து தினமும் சென்று வருகின்றனர். சுரங்கப்பாதை பணி முடியாததால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ - மாணவியர், வேலைக்குசெல்வோர் தண்டவாளத்தை கடந்து, ஆபத்தான நிலையில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு ரயில்வே மேம்பாலத்தின் இரு சர்வீஸ் சாலைகளையும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக சுரங்கப் பாதையை சீரமைத்து வாகனங்கள் சென்று வரநடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ௮ண்மையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

இந்த திட்டத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை எனில், போராட்டம் நடத்தப்படும் என ௮க்கட்சியினர் எச்சரித்துள்ளனர். ஆனால் இது சாத்தியம் இல்லை என்றும், பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மட்டுமே சுரங்கப்பாதை கட்டப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முனிசெல்வம்

ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் முனிசெல்வம் கூறியது: சுரங்கப்பாதை என்பது எங்களுடைய பகுதிக்கு அவசியமான தேவையாக உள்ளது. 6 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட சுரங்கப்பாதை பணி முடியாததால், செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள ராமகிருஷ்ணா நகர், பவானி நகர், வல்லம், தேனூர், பட்டரைவாக்கம், குன்னவாக்கம், அம்மணம்பாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள், ஆபத்தான முறையில் தினசரி ரயில் தண்டவாளத்தை கடந்து செங்கல்பட்டு நகருக்கு செல்கின்றனர்.

சிலர், 5 கிமீ துாரம் சுற்றி சென்று ரயில்வே மேம்பாலத்தை கடந்து செங்கல்பட்டு நகருக்கு செல்கின்றனர். மேலும், சுரங்கப்பாதை பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. கிடப்பில் போட்டுள்ள சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும். இது குறித்து பலமுறை எம்.பி., அமைச்சரிடம் மனு கொடுத்திருக்கிறோம். ஆனால், எந்தவொரு நடவடிக்கையும் இல்லை, இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்றார்.

சுரங்கப்பாதை பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியே புதர்
மண்டி காணப்படுகிறது.

நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியது: முதலில் இலகுரக வாகனங்கள் செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. பின்னர் நிலம் ஆர்ஜிதம் செய்வதில் நிதி அதிகம் தேவைப்படும் என்பதால், பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

தற்போது ரயில்வே தண்டவாளத்துக்கு இடையே மறைமலை நகர் நகராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் மாற்றி அமைக்கப்பட்டால் மட்டுமே சுரங்கப் பாதை பணி தொடர்ந்து நடைபெறும். இந்த குழாயை மாற்றியமைப்பதற்காக நெடுஞ்சாலை துறை சார்பில் குடிநீர் வாரியத்துக்கு ரூ.25 லட்சம் செலுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அரசு நிதி ஒதுக்கும்பட்சத்தில் இந்த பணி தொடங்கப்படும். குடிநீர் குழாயை மாற்றியமைத்தால் மட்டுமே ரயில்வே நிர்வாகம்பணியை தொடங்கும். தற்போது வரைரயில்வே நிர்வாகம், 37 மீட்டர் வரை பணியைமுடித்து விட்டனர். இன்னும், 23 மீட்டர் மீதம்உள்ளது. மேலும், ரூ.1.5 கோடி மதிப்பீட்டில்நெடுஞ்சாலைத்துறை தன்னுடைய பணியை தொடங்கும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x