Published : 07 Feb 2024 01:48 PM
Last Updated : 07 Feb 2024 01:48 PM

“மக்களுக்குத் தொண்டாற்ற யார் வந்தாலும் மகிழ்ச்சி” - விஜய்யின் அரசியல் பிரவேசம்; முதல்வர் ஸ்டாலின் கருத்து

முதல்வர் ஸ்டாலின் | நடிகர் விஜய்

சென்னை: ஸ்பெயினில் அரசுமுறை பயணத்தை முடித்துவிட்டு புதன்கிழமை சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘மக்களுக்குத் தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

திரைப்பட நடிகர் விஜய் எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்தனர். இந்நிலையில், தற்போது, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி, அதைத் தேர்தல் ஆணையத்தில் பதிவும் செய்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் விஜய். இந்நிலையில், விஜய்யின் தமிழக வெற்றி கழகம் வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பேட்டியிடப்போவதில்லை எனவும், யாருக்கும் ஆதரவில்லை எனவும் விஜய் தெளிவுபடுத்தியிருந்தார்.

அதே நேரத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களில் மட்டும் நடித்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அதோடு முக்கியமாக, ஊழல் சீர்கேடுகள் நிறைந்த, மதவாத என விஜய் தனது அறிக்கையில் விமர்சனம் செய்திருந்தார். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது அதிமுக, தற்போது ஆட்சியில் இருப்பது திமுக. மேலும் மத்தியில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பது பாஜகதான். விஜய்யின் அறிக்கை யாரை விமர்சிக்கும் விதமாக இருந்தது என இணையதள வாசிகளும், அரசியல் கட்சி தலைவர்களுமே குழம்பி போயினர்.

இதனிடையே, “கட்சி தொடங்கிய நடிகர் விஜய் விமர்சித்தது திமுக, பாஜகவைதான்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்மையில் விளக்கமளித்து விட்டார்.

இந்நிலையில், ஸ்பெயினில் அரசுமுறை பயணத்தை முடித்து விட்டு புதன் கிழமை சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின் . அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் வரவேற்பேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

கேள்வி: தற்போது நீங்கள் வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டு வரும்போது முதலீடுகள் அதிகளவு ஈர்க்கபடுகிறது. இதற்கு அடுத்த கட்டமாக முதலீடுகளை ஈர்ப்பதற்காக, வேறு நாடுகளுக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறதா?

முதல்வர்: திட்டமிடும்போது உங்களிடம் சொல்லிவிட்டு செய்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் இப்போது நெருங்கி வருவதால், அதற்குப் பிறகுதான் என்னுடைய பயணங்கள் இருக்கும்.

கேள்வி: நாடாளுமன்றத்தில் பிரதமர் உரை நிகழ்த்தியிருக்கிறார். பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். அது தொடர்பாக, அந்த நிகழ்வுகளை எல்லாம் நீங்கள் பார்த்தீர்களா?

முதல்வர்: பார்த்தேன். படித்தேன். ரசித்தேன். சிரித்தேன். ஏனென்றால், பிஜேபி தான் எதிர்க்கட்சி போலவும், காங்கிரஸ் ஆளுங்கட்சி போலவும், அவர் தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததிலிருந்து, எதிர்க்கட்சியாக அவர் செயல்பட்டுக் கொண்டு, ஆளுங்கட்சியாக காங்கிரஸ் இருப்பது போல attack செய்வது போலவும் பேசிக் கொண்டிருக்கிறார். இதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

கேள்வி: மேலும், பிரதம மந்திரி பேசும்போது நாடாளுமன்றத் தேர்தலில் 400 இடங்களை கைப்பற்றுவோம் என்று சொல்லி இருக்கிறார்? அதுபற்றிய தங்களது கருத்து?

முதல்வர்: மொத்தம் 400 தானா? 543 இடங்கள் இருக்கிறது. அதையும் கைப்பற்றுவேன் என்று சொன்னாலும் ஆச்சரியம் இல்லை.

கேள்வி: நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கி இருக்கிறார்? எப்படி பார்க்கிறீர்கள்?

முதல்வர்: மக்களுக்குத் தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x