Published : 07 Feb 2024 11:16 AM
Last Updated : 07 Feb 2024 11:16 AM

“கதவு திறந்தே இருக்கிறது” - அமித் ஷா கருத்தும் தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்வினையும்

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த ஊடகப் பேட்டி ஒன்றில், “தமிழ்நாட்டில் தேர்தல் கூட்டணி தொடர்பான ஆலோசனைகளை நடைபெற்றுவருகின்றன. கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது. தமிழ்நாடு ஒரு முக்கியமான மாநிலம். தேர்தல் அறிக்கையில் தமிழகம் சார்ந்த நிறைய அறிவிப்புகள் இருக்கும்” எனக் கூறியுள்ளார். அமைச்சர் அமித் ஷாவின் இந்தக் கருத்து தமிழக அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி இன்னும் பட்டுப்போய்விடவில்லை என்பதை உணர்த்துவதாக இருப்பதாக கருத்துகள் எழத் தொடங்கியுள்ளன.

அமைச்சர் அமித் ஷாவின் இந்தக் கருத்து குறித்து முன்னாள் முதல்வரும் மூத்த அரசியல்வாதியுமான ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், “தேர்தல் கூட்டணி கதவு இன்னும் திறந்தே இருக்கிறது என உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்லியிருப்பது அவருடைய நல்ல மனதைக் காட்டுகிறது. பாஜகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது தொடர்பாக விரைவில் அறிவிப்பேன்” என்றார். ஓபிஎஸ் தரப்பு, பாஜக, டிடிவி தினகரன், சசிகலா இணைந்து ஓரணியில் போட்டியிடலாம் என்ற பார்வைகளும் நிலவுகின்றன.

ஓபிஎஸ்ஸின் கருத்து அரசியல் விவாதத்தை கிளப்பாமல் மையமாகச் சென்றுவிட திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (பிப்.7) காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தபோது, “அதிமுகவுக்காக கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது என்று அமித் ஷா சொல்லியிருப்பதன் மூலம் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. அதேபோல் அதிமுக - பாமகவுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதன் மூலம் தமிழகத்தில் அக்கட்சி பலவீனமடைந்திருப்பது அம்பலமாகியிருக்கிறது. திமுகவின் பலமான கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட இங்கே யாருமில்லை” என்றார்.

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், “பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்பது அதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களின் முடிவு. பாஜகவுக்கான கதவு சாத்தப்பட்டுவிட்டது. முன்வைத்த காலை பின்வைக்கப் போவதில்லை” என்று கூறினார். இவ்வாறாக அமித் ஷாவின் ஒரு கருத்து பல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இன்னும் பார்க்கவில்லை.. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அமித் ஷா தெரிவித்த கருத்துகளை இன்னும் நான் பார்க்கவில்லை. பார்த்தால் சொல்கிறேன்” என்று கூறியுள்ளார்.

கூட்டணி முறிவும் விமர்சனங்களும்.. முன்னதாக அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில் பேச்சுகள், சர்ச்சைப் பேட்டிகள் காரணமாக அமைந்தன. அதனையடுத்து பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அவ்வப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிவந்தார். இருந்தாலும் அதிமுக - பாஜக கூட்டணி பூசல் வெறும் நாடகம் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி அதிமுக - பாஜக கூட்டணி இல்லை என்றார். அதன்பின்னரும் கூட விமர்சனங்கள் அடங்காத சூழலில், பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக - பாஜக கூட்டணி முறிவு என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அதிமுகவுக்காக கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது என்ற பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவின் பேச்சு மீண்டும் அதிமுக - பாஜக மறைமுக உறவு என்ற விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, இடது சாரிகள் கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்தச் சூழலில் எதிரணி தரப்பில் இன்னும் கூட்டணி குறித்தே இழுபறி நீடிப்பதாக பரவலாகப் பேசப்படுகிறது.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உறுதியாக இருப்பதால், பாமக, தேமுதிக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளிடம் அதிமுக தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ‘மக்களவை தேர்தலை முன்னிட்டு, மாநில நலனிலும், தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும்’ என்று அறிவித்த பாமக, இதுதொடர்பாக அதிமுக, பாஜகவுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு கூட்டணிப் பேச்சுக்களே நிறைவு பெறாத சூழலில் அமித் ஷாவின் கருத்து பல்வேறு வாதவிவாதங்களைத் தூண்டியிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x