Published : 06 Feb 2024 05:41 PM
Last Updated : 06 Feb 2024 05:41 PM
திருவண்ணாமலை: தேவிகாபுரத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புறக்கணித்ததால், அவரை வரவேற்க ராட்சத மாலையுடன் காத்திருந்த பாஜக தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.
‘என் மண், என் மக்கள்’ யாத்திரையை தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மற்றும் ஆரணியில் நேற்று முன்தினம் மாலை மேற்கொண்டார். போளூரில் இருந்து தேவிகாபுரம் வழியாக ஆரணி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது அவருக்கு மிகப்பெரிய பிரம்மாண்ட மாலையுடன் பாஜகவினர் வரவேற்க காத்திருந்தனர். அண்ணாமலையை வரவேற்று சாலையில் இருபுறங்களிலும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
பிரம்மாண்ட மாலையை எளிதாக தூக்க முடியாது என்பதால் ‘பொக்லைன்’ இயந்திரத்தில் மாலை கொண்டு வரப்பட்டன. இதேபோல், பெண்கள் உள்ளிட்ட தொண்டர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், போளூரில் யாத்திரையை முடித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேவிகாபுரம் வழியாக செல்லாமல் மாற்று வழித்தடத்தில் ஆரணிக்கு சென்றுவிட்டார்.
இதனால், தேவிகாபுரத்தில் ராட்சத மாலையுடன் காத்திருந்த பாஜகவினர் ஏமாற்றமடைந்து வீடு திரும்பினர். அண்ணாமலையை வரவேற்க டிஜிட்டர் பேனர் மற்றும் மாலையுடன் காத்திருந்த தொண்டர்களின் பணம் விரையமானது.
இதனால், அவர்கள் விரக்தி அடைந்தனர். காலநேரம் கருதி, தேவிகாபுரம் வழியாக செல்ல முடியாத நிலை அண்ணாமலைக்கு ஏற்பட்டதாக பாஜக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தேவிகாபுரத்தில் வரவேற்பு நிகழ்வு குறித்த பயணம் திட்டம் தொடர்பாக அண்ணாமலையின் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை என பாஜக தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT