Published : 06 Feb 2024 05:33 PM
Last Updated : 06 Feb 2024 05:33 PM

“திமுகவின் போலி திராவிட மாடல் சமூக நீதி பிம்பம் வெளிப்பட்டுள்ளது” - எல்.முருகன் பதிலடி @ டி.ஆர்.பாலு செயல்

சென்னை: "பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சிப் பணிகளை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்கள், அவர்களுடைய கையில் எடுக்கும் ஆயுதம்தான் இந்த தரங்கெட்ட வார்த்தைகள். திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவுக்கு இந்த தரங்கெட்ட பேச்சு முதல் முறையல்ல" என்று தன்னைப் பார்த்து எம்.பி. பதவிக்கும், அமைச்சராக இருப்பதற்கும் தகுதியற்றவர் என பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவுக்கு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பதிலடி தந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் இட்ட பதிவு: “திமுகவின் போலி திராவிட மாடல் சமூக நீதி பிம்பம் இன்று மக்களவையில் வெளிப்பட்டுள்ளது. சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பட்டியலின மக்களின் வாக்குகளுக்காக மட்டுமே அரசியல் செய்பவர்கள் திமுகவைச் சேர்ந்த இந்த போலி திராவிட மாடல் சமூக நீதிக்காரர்கள். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்கும், அவர்களுக்குத் தேவையான திட்டங்களுக்கும் ஏற்ப பணி செய்ய நேரமில்லாதவர்கள், தேர்தல் காலங்களின்போது வெற்றி பெற உருவாக்கும் காகித குப்பையே ‘சமூக நீதி’ எனும் தேர்தல் அறிக்கை.

பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சிப் பணிகளை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்கள், அவர்களுடைய கையில் எடுக்கும் ஆயுதம்தான் இந்த தரங்கெட்ட வார்த்தைகள். திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவுக்கு இந்த தரங்கெட்ட பேச்சு முதல் முறையல்ல. தன்னுடைய வாழ்க்கை முறையை அதற்கேற்ப வாழ்ந்து பழகியவர் இனியும் இதை நிறுத்தப் போவதில்லை என்பது தெளிவாகிறது.

சமூக நீதிக்கும் இவர்களுக்கும் இருக்கும் தூரத்தை இன்று காட்டியுள்ளார்கள். போலி திராவிட மாடல் சமூக நீதி பிம்பத்தை முகத்தில் மாட்டிக் கொண்டு திரியும் திமுகவின் முகமூடியை, வருகின்ற மக்களவைத் தேர்தலில் மக்கள் கிழித்தெறிவார்கள் என்பதில் எந்த மாற்றமுமில்லை" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, மத்திய இணையமைச்சர் எல்.முருகனைப் பார்த்து “நீங்கள் எம்.பி. பதவிக்கும், அமைச்சராக இருப்பதற்கும் தகுதியற்றவர்” என்று திமுக எம்.பி. டிஆர் பாலு மக்களவையில் பேசியது பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் நிமித்தமாக பாஜகவினர் மக்களவையில் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். | விரிவாக வாசிக்க > “குறுக்கிடாதீர்கள்... நீங்கள் தகுதியற்றவர்...” - எல்.முருகனை சாடிய டி.ஆர்.பாலுவும், பாஜக கொந்தளிப்பும் @ மக்களவை

இதனிடையே, “நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனைப் பார்த்து ‘அன்ஃபிட்’ என்று கூறுகிறார் திமுக எம்.பி டி.ஆர்.பாலு. பிஃட் ஆன அமைச்சர் என்றால் யார் என்று டி.ஆர்.பாலுவிடம் கேட்க விரும்புகிறேன். கொள்ளை அடிப்பவரா, அப்பா தலைவராக இருப்பார், மகன் அமைச்சராக இருப்பதா? எல்.முருகனிடம் டி.ஆர்.பாலு பொது இடத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும். நீங்கள், எல்.முருகனுடைய சமுதாயம் குறித்து தவறாக பேசியிருக்கிறீர்கள். தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த பட்டியலின சகோதர, சகோதரிகளை டி.ஆர்.பாலு தவறாக பேசியுள்ளார்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக கூறியுள்ளார். அதன் விவரம் > எல்.முருகனிடம் டி.ஆர்.பாலு பொது இடத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும்: அண்ணாமலை காட்டம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x