Published : 06 Feb 2024 04:49 AM
Last Updated : 06 Feb 2024 04:49 AM
விருத்தாசலம்: கடலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறையினரின் அலட்சியப் போக்கால், வாராந்திர குறை கேட்பு கூட்டத்தில் மனுக்கள் குவிந்து வருவதாக ஆட்சியர் அலுவலக மனுப்பிரிவு அலுவலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறை கேட்புக் கூட்டம் நடைபெறும். அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் நேற்று கூட்டம் நடந்தது. 500-க்கும் மேற்பட் டோர் மனு அளித்தனர். அவர்களிடம் மனுக் களைப் பெற்ற ஆட்சியர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அழைத்து உரிய தீர்வு காண வலியுறுத்தினார்.
இது ஒரு வாடிக்கையான நிகழ்வாக மாறிவிட்ட நிலையில், மங்கலம்பேட்டையை அடுத்தவிசலூர் கிராமத்தைச் சேர்ந்த தம்புசாமி (82) என்பவர், திமுக துண்டு, கரை வேட்டியுடன் ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு, கூச்சலிட் டவாறே குறை கேட்பு கூட்டம் நடந்த இடத்தில் இருந்து வெளியே வந்தார்.
அவரை அங்கிருந்த பெண் காவலர், ‘கூச்சலிட வேண்டாம்’ என கேட்டுக்கொண்டார். அதற்கு அந்த முதியவர், “இதே போல் இழுத்தடிக்கப்பட்டால் உனக்கு தெரியும்” என்று ஆவேசமாக கூறினார்.
அந்த முதியவரிடம் பேச்சு கொடுக்க, அவர்கூறுகையில், “ நாங்கள் 3 பேர் உடன் பிறந்த வர்கள். எனது பாரம்பரிய சொத்துகளை, உடன்பிறந்த சகோதர்களுடன் பங்கிட்டுக் கொண்டேன். அதை மூவருக்கும் சரிசமமாக அளந்து விட வேண்டிய நில அளவையர் பன்னீர்செல்வமும், கிராம உதவியாளர் தென்னரசுவும், எனது பங்குக்கு உரிய இடத்தை மட்டும்குறைத்து அளவிட்டனர். நான் கட்டணம் செலுத்தி அளவிட்டு பிரிக்கக் கோரியிருந்த நிலையில் எனக்கான பங்கை குறைத்து அள விட்டனர்.
இதுதொடர்பாக முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்த நிலையில், மறுநாள் அதிகாலை யிலேயே நில அளவையரும், கிராம உதவி யாளரும் பதிவேட்டில் திருத்தம் செய்து பதில் கொடுத்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், தற்போது மீண்டும் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன். நில அளவையரும், கிராம உதவியாளரும் செய்யும் தில்லுமுல்லுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது” என்று தெவித்தார்.
இதே போல மனு அளிக்க வந்த பாரதாஎன்ற பெண், தனது கைப்பையை வீசியெறிந்தவாறு அறையை விட்டு வெளியேறினார். அவரிடம், ‘ஏன் இதுபோன்று ஆசேவசப்படு கிறீர்கள்?’ என்று கேட்டபோது, “எனது பட்டா இடத்தில், கட்டியிருக்கும் வீட்டுக்கு எனது கணவரின் சகோதரர்கள் வாடகைக் கேட்டு பிரச்சினை செய்கின்றனர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நியா யம் கிடைக்கவில்லை.
திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இப்போது ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தபோது, ‘அங்கு மனுவை கொடு, பின்னர் இங்கே சீல்போடு, பின்னர் ரசீது வரும். அப்புறம் தான் ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும்’ என்கின் றனர். தொழுதூரில் இருந்து மூன்றரை மணி நேரம் பயணித்து வந்துள்ளேன். எப்போது மனுகொடுத்து எப்போது செல்வது? என்ற ஆவேசத் தில் தான் கை பையை வீசியெறிந்தேன்” என்றார்.
இதற்கிடையே, பண்ருட்டியை அடுத்த கணிசப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள்சிலர் குறை கேட்புக் கூட்டத்தை விட்டு ஆவேசமாக வெளியே வந்தனர். அவர்களை பின்தொடர்ந்து வந்த பண்ருட்டி துணை வட்டாட் சியர், அவர்களின் மனுவைப் பெற்றுக் கொண்டு, “உங்களுக்கான இலவச வீட்டு மனைப்பட்டா தொடர்பாக பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகம் வாருங்கள் அங்கே பேசி முடிவு செய்யலாம்” என்றார்.
அப்போது கூட்டத்தில் இருந்த பெண்கள், “பலமுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து விட்டோம். நடவடிக்கை இல்லை. அதனால் தான் இங்கு வந்தோம். இப்போது மீண்டும், ‘அங்கு வாருங்கள் பார்த்துக் கொள் ளலாம்’ என்றால் எப்படி?
மாறிமாறி அலைக்கழிக்கிறீர்கள்! ஆனால், எங்களுக்கு பட்டா கிடைத்தபாடில்லை. அதேநேரத்தில் வசதி படைத்தவர்கள் ஆக்கிரமித்து பயிர் செய்யும் புறம்போக்கு இடங்களைவிரைவாக பட்டா போட்டு கொடுக்கிறீர்கள். அது மட்டும் எப்படி சாத்தியமாகிறது?” என சரமாரியாக கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர்.
மனுதாரர்கள் ஆவேசமாக வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, மனுவை பதிவுசெய்யும் அலுவலர்களிடம் கேட்டபோது, “அரசும் பல்வேறு வகைகளில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று தீர்வுகாண முயல்கிறது.
கடலூர் மாவட்டத்தில் வருவாய்த் துறையி னரின் அலட்சியத்தால் மனுக்கள் மீதான நடவடிக்கை இழுத்தடிக்கப்படுகிறது. ஆட்சியர், பதில் கேட்டால், தவறான தகவலைக் கூறி, அவரையும் சமாதானம் செய்யும் போக்கு தொடர்கிறது. இது தொடரும் வரையில் இந்த குறைகேட்புக் கூட்டத்தில் தீர்வு ஏற்பட வாய்ப்பில்லை” என்று தெரிவித்தனர்.
‘ஊர்கள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தி, மனுக்கள் பெறுவதும், வாரந்தோறும் குறைகேட்பு கூட்டங்கள் நடத்தி மனுக்கள் பெறுவதும் பெரிய விஷயமில்லை. அந்த மனுக்கள் மீதான முறையான தீர்வுகளை அளிப்பது அவசியம்’ என்பதே மக்களின் கருத்தாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT