Published : 06 Feb 2024 03:32 PM
Last Updated : 06 Feb 2024 03:32 PM

நகரம் என்ற வரையறைக்குள் இல்லாத நிலையில் வரி விதிப்புக்காக பேரூராட்சி அந்தஸ்து @ நீலகிரி

ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பார்வுட் கிராமம்.

உதகை: தமிழ்நாட்டிலுள்ள மிகச் சிறிய பின்தங்கிய மாவட்டங்களில் நீலகிரியும் ஒன்று. பழங்குடியினர் அதிகமாக இருக்கக்கூடிய இந்த மாவட்டத்தில் பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். சுமார் 7 லட்சம் மக்கள்தொகை கொண்ட இந்த மாவட்டத்தில், 1996-ம் ஆண்டுக்கு முன்பு 31 பேரூராட்சிகள் இருந்தன. அந்த பேரூராட்சிகள் நலிவடைந்த நிலையில் இருந்ததால், 1999-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி 11 பேரூராட்சிகளாக குறைக்கப்பட்டன. மீதமுள்ள பேரூராட்சிகள் இன்றுவரை ஊராட்சிகளாக இருந்து வருகின்றன.

தற்போது, கேத்தி, சோலூர், ஜெகதளா, உலிக்கல், கோத்தகிரி, நடுவட்டம், தேவர்சோலை, பிக்கட்டி, கீழ்குந்தா, ஓவேலி, அதிகரட்டி ஆகிய 11 பேரூராட்சிகள் உள்ளன. போதுமான வருவாய் இன்றி இந்த 11 பேரூராட்சிகளும் நலிவடைந்த நிலையில் இருக்கின்றன. பேரூராட்சியாக இருப்பதற்கு தாலுகா தலைமை இடம், பதிவுத் துறை அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்டவை இருக்கும் பகுதியாகவோ, சிறப்புமிக்க நகரமாகவோ இருக்கலாம். வழிபாட்டு தலங்களாக இருக்கலாம், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக இருக்கலாம்.

சந்தைகள், பேருந்து நிலையங்கள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதிகளை வளர்ந்து வருகிற நகரங்கள் என்ற வகையில், நகராட்சிக்கும், ஊராட்சிக்கும் இடைப்பட்ட உள்ளாட்சி அமைப்பாக, இந்தியாவிலேயே முதன்முதலாக பேரூராட்சிகளை தமிழ்நாடு அரசு அமைத்தது. ஆனால், நீலகிரி மாவட்டத்தை பொறுத்த அளவில் பழங்குடிகள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகமாக வாழ்கின்றனர்.

சிறு, குறு தேயிலை விவசாயிகள், மலை காய்கறி விவசாயிகள், விவசாயக் கூலிகள், தேயிலை தோட்ட கூலி தொழிலாளர்கள் நிறைந்திருக்கின்ற ஒரு மாவட்டம். இங்கு 40 சதவீத மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர் என்று அரசு புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால், இங்கு இருக்கக்கூடிய11 பேரூராட்சிகளும், அரசு வகுத்துள்ள நகரம் என்ற வரையறைக்குள்வரவில்லை.

ஆனால், மக்கள்தொகையின் அடிப்படையிலேயே பேரூராட்சிகளாக உள்ளன என்று கூறப்படுகிறது. உண்மையில் இந்த பேரூராட்சிகள் இன்று வரைக்கும் பேரூராட்சிகளாக இருப்பதற்கான காரணம், அந்த பேரூராட்சிகளில் பணிபுரியும் அலுவலர்களின்பணி பாதுகாப்புக்காக மட்டுமே. மேலும்,10-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகள் இருந்தால்தான், அங்கு பேரூராட்சிகளின் துணை இயக்குநர் அலுவலகம் அமையும் என்பதால், 11 பேரூராட்சிகள் அமையுமாறு பார்த்துக் கொண்டுள்ளனர் என்று, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவரும், அதிகரட்டி பேரூராட்சி உறுப்பினருமான சு.மனோகரன் கூறும்போது, ஊராட்சிகளைவிட வீட்டு வரி, தொழில் வரி, விளம்பர வரி, குடிநீர் வரி, சொத்து வரி என்று அனைத்தும் பேரூராட்சிகளில் அதிகம்.

அதுமட்டுமின்றி மத்திய அரசு நிதி உதவியுடன் ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், தேசிய ரூபன் திட்டம், ஜல்சக்தி என்ற நீர் ஆற்றல் திட்டம், ஜல்ஜீவன் என்ற குடிநீர் திட்டம் உள்ளிட்டவை பேரூராட்சிகளில் இல்லை.

1999-ம் ஆண்டு அரசாணையின்படி, நலிவடைந்த பேரூராட்சிகளை ஊராட்சிகளாக மாற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற கூறிய அரசின் முடிவுக்கு செயல் அலுவலர்கள் ஒத்துழைக்காமல், அங்கிருந்த பேரூராட்சி மன்ற உறுப்பினர்களின் அறியாமையை பயன்படுத்தி, சில பேரூராட்சிகளில்தீர்மானம் நிறை வேற்றப் படாமலும், சிலவற்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அரசுக்கு அனுப்பாமலும் வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

பேரூராட்சிகளாக வைத்திருப்பதால் இங்கு வாழும் மக்களுடைய வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. பெரும் வரிச்சுமைக்குமக்கள் ஆளாகி இருக்கின்றனர். வாழ்வாதாரம் இல்லாததால் கடன் சுமைக்கு ஆளா கின்றனர்.

ஆகவே, அரசு இதை கவனத்தில் கொண்டு, 11 பேரூராட்சிகளில் நலிவடைந்த பேரூராட்சிகள் எவை என்று கண்டறிந்து அவற்றை ஊராட்சிகளாக மாற்றுவதற்கான ஓர் அரசாணையை பிறப்பிக்க வேண்டும். மேலும், நீலகிரி மாவட்டத்திலுள்ள 35 ஊராட்சிகளையும் சிற்றூராட்சிகளாக மாற்றி, மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x