Published : 06 Feb 2024 02:45 PM
Last Updated : 06 Feb 2024 02:45 PM
சென்னை: மெரினா கடற்கரையில் நடைபெறும் பெண் காவலர்கள் இசைக்குழுவின் இன்னிசை சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்து வருகிறது. குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும், மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கை நிலை நாட்டவும் போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மேலும், பொது மக்களுடன் நல்லுறவை மேம்படுத்தவும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகில் புதிதாக காவல் துறையின் இசைக் குழுவினர் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 5 முதல் 6 மணி வரை ஒரு மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, இசை விருந்து படைப்பதுபோல் உள்ளதாக சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பாடல்களை இசைப்பதோடு, நடனமுடன் இசை வாத்தியங்களை பயன்படுத்தி வருவது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சர்வதேச நடைமுறை: இதுபோன்ற இசை நிகழ்ச்சிகள் ஏற்கெனவே லண்டன், டோக்கியோ, பாரிஸ் மற்றும் நியூயார்க் போன்ற பெருநகரங்களில் பொது இடங்களில் அந்தந்த நாட்டு காவல் துறையினரின் இசை குழுவினரால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் இசை நிகழ்ச்சி நடத்தும் மற்றொரு பெருநகர காவல்துறையாக சென்னை பெருநகர காவல்துறை உருவாகி உள்ளது.
போலீஸாரின் இசை நிகழ்ச்சியை குடும்பத்துடன் நேரில் கேட்டு மகிழ்ந்த சுற்றுலாப் பயணி கமலேஷ் கூறும்போது, ‘கூலி வேலை செய்து வருகிறேன். அதிகளவில் செலவு செய்து சினிமா, வணிக வளாகங்களுக்கு செல்ல போதிய பண வசதி இல்லை. கையில் குறைந்த அளவு பணம் இருந்தால்கூட போதும்.
மெரினா சென்று மகிழ்ச்சியாக இருக்கலாம். அதன் அடிப்படையிலேயே நான் மெரினா வந்துள்ளேன். தற்போது போலீஸார் நடத்திய இசை நிகழ்ச்சியை குடும்பத்தோடு பார்த்து ரசித்தேன். இது மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தருகிறது’ என்றார்.
இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறும்போது, ‘இந்தியாவில் முதன் முறையாக சென்னை பெருநகர காவல் துறையில் அண்மையில் இணைக்கப்பட்ட அனைத்து மகளிர் பேக் பைப்பர் இசைக்குழுவினர் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர்.
தற்போது நடத்தப்பட்டு வரும் இசை நிகழ்ச்சி, பொது மக்களுடனான உறவுகளை கட்டமைக்கவும், காவல் துறையினருக்கும் சமூகத்துக்கும் இடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் உதவும். இந்த இசை நிகழ்ச்சியை பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இலவசமாகவே கண்டு களிக்கலாம் என்றார்.
சென்னை பெருநகர காவல் துறையின் பேண்டு மற்றும் பெண்கள் பேக் பைப்பர் இசை நிகழ்ச்சியை சென்னை காவல்துறை தலைமையிட இணை ஆணையர் கயல்விழி கண்காணித்து வருகிறார். நீங்களும் வாங்க... மெரினாவில் காவல் துறையின் இசை நிகழ்ச்சியை இலவசமாக கண்டு ரசிக்கலாம் என காவல்துறை அழைக்கிறது..!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT