Published : 06 Feb 2024 05:14 AM
Last Updated : 06 Feb 2024 05:14 AM

தனி நீதிபதி விசாரணைக்கு எடுத்துள்ள வழக்குகளை யார் விசாரிப்பது என்று தலைமை நீதிபதி முடிவு செய்வார்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: இந்நாள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து எடுத்த வழக்குகளை யார் விசாரிப்பது என்பதை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு செய்வார் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் திமுக அமைச்சர்களான சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அதிமுக அமைச்சர் பா.வளர்மதி ஆகியோரை சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து கீழமை நீதிமன்றம் விடுவித்தும், விடுதலை செய்தும் பிறப்பித்த உத்தரவுகளையும், வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து திமுகஅமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறார்.

ஏற்கெனவே முடிந்துபோன இந்த வழக்குகளை உயர் நீதிமன்ற தனி நீதிபதி மீண்டும் பல ஆண்டுகள் கழித்து தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மேல்முறையீடு செய்தனர்.

நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பி.கே.மிஷ்ரா அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதன் விவரம்:

மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி: தாமாக முன்வந்து வழக்கை விசாரிப்பதற்கு என ஒரு வரைமுறை உள்ளது. அதை தனிநீதிபதி பின்பற்றவில்லை. தாமாக முன்வந்து வழக்கை எடுப்பது தொடர்பாக தலைமை நீதிபதியின் முன்அனுமதியை பெறுவதற்கு முன்பாகவே தனி நீதிபதிவிசாரணையை தொடங்கிவிட்டார். இதுதொடர்பான முன்அனுமதி கடிதத்தைதலைமை நீதிபதி பார்த்துவிட்டார் என்றுதான் பதிவுத் துறை பதில் அளித்துள்ளது. தலைமை நீதிபதியின் ஒப்புதல் கிடைக்கும் வரை தனி நீதிபதியால் ஏன் காத்திருக்க முடியவில்லை.

நீதிபதிகள்: எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் ரோஸ்டர் நீதிபதியே அவர்தானே. அப்படி இருக்க, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்ததில் என்ன தவறு இருக்கிறது. இதற்கு தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெறுவது கட்டாயமா?

அபிஷேக் மனு சிங்வி: ரோஸ்டர் நீதிபதிஎன்றாலும், எந்த வழக்குகளை யார் விசாரிக்க வேண்டும் என ஒதுக்கும் பொறுப்புதலைமை நீதிபதிக்குத்தான் உள்ளது.அதற்கான நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றுதான் கூறுகிறோம்.

உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தரப்பு மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி: இந்த வழக்குகளை தனி நீதிபதிதானாக முன்வந்து விசாரிக்கும் நடவடிக்கைகளுக்கு தலைமை நீதிபதி ஒப்புதல் வழங்கி உள்ளார்.

அபிஷேக் மனு சிங்வி: வழக்கை தாமாக முன்வந்து எடுத்த தனி நீதிபதி,தகவலுக்காக மட்டுமே தலைமை நீதிபதியின் பார்வைக்கு அனுப்பியுள்ளார். இதைத்தான் தலைமை நீதிபதி பார்த்து விட்டார் என பதிவாளர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுப்பதில் தனி நீதிபதி ஏன் அவ்வளவு அவசரம் காட்ட வேண்டும்.

ராகேஷ் திவேதி: கீழமை நீதிமன்றங்களில் விசாரித்து தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுப்பது என்றால், தலைமை நீதிபதி அதில் உள்ள அம்சங்களை ஆராய்ந்து, அதை தானே விசாரிக்கலாம் அல்லது வேறு அமர்வுக்கு மாற்றலாம்.

நீதிபதிகள்: அப்படியென்றால் தனி நீதிபதி தாமாக முன்வந்து எடுத்துள்ள வழக்குகளை யார் விசாரிப்பது என்பதை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே முடிவு செய்யட்டும். ஏனென்றால் தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெறும் முன்பாகவே தனி நீதிபதி விசாரணையை தொடங்கிவிட்டார் என்ற மனுதாரர்களின் வாதத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதியே இந்த வழக்குகளை விசாரி்க்கலாம். அல்லது எந்த நீதிபதியிடமும் ஒப்படைக்கலாம். இந்த உத்தரவு மற்ற வழக்குகளுக்கும் பொருந்தும். அதேநேரம் தனி நீதிபதி இந்த வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது குறித்து எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, இந்த வழக்குகளின் விசாரணையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்குகளின் விசாரணை, உயர் நீதிமன்றத்தில் நீதிபதிஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், ‘‘இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை பொருத்து முடிவு செய்து கொள்ளலாம்’’ என்று கூறி விசாரணையை நாளைக்கு (பிப்.7) தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x