Published : 05 Feb 2024 08:21 PM
Last Updated : 05 Feb 2024 08:21 PM
திருவண்ணாமலை: “இண்டியா கூட்டணியில் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் இல்லை” என வந்தவாசியில் நடைபெற்ற என் மண், என் மக்கள் யாத்திரையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.
என் மண், என் மக்கள் யாத்திரையை தமிழக பாஜகத் தலைவர் அண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இன்று (பிப். 5) மாலை மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, “சரித்திரத்தை மாற்றிய ஊர், வந்தவாசி. 250 ஆண்டுகளுக்கு முன்பு பிரெஞ்சு படைக்கும் ஆங்கிலேய படைக்கும் யுத்தம் நடைபெற்றது. வந்தவாசி போர் என அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்று, நாடு முழுவதையும் ஆண்டனர். நாட்டை விட்டு பிரெஞ்ச் படையினர் வெளியேறினர். இதேபோல், ஆன்மிகமும் ஆழமாக உள்ள ஊராகும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முருகப் பெருமானுக்கு சிவன் காட்சிக் கொடுத்த தவளகிரீஸ்வரர் மலை உள்ளது. 120 அடி உயர கோபுரம் உள்ள பாண்டுரங்கர் கோயில் உள்ளது. வந்தவாசி ‘கோரை பாய்’ தமிழகத்தில் புகழ் பெற்றது. பாய் உற்பத்தியில் 5 ஆயிரம் குடும்பங்கள் ஈடுபட்டுள்ளது. அறிவியல் பூர்வமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தேசூரில் நீர் மேலாண்மையை காப்பாற்றியதாக கல்வெட்டு உள்ளன. விவசாயத்துக்கு பெயர் பெற்ற ஊராகும்.
3.50 லட்சம் அரசு வேலை எங்கே? - தமிழகத்தில் அரசியல் மாற்றம் வர வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் விரும்புகின்றனர். குடும்ப அரசியல், சாதி அரசியல், ஊழல் மற்றும் அடாவடியை மையப்படுத்தி 70 ஆண்டுகளாக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நான்கும் மக்களுக்கு பிடிக்கவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் 5 ஆண்டுகளில் மூன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 31 மாதங்களாக 10,400 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மக்களின் வளர்ச்சிக்காக இல்லாமல், குடும்பத்தின் வளர்ச்சிக்காக மட்டும் அரசு உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மீண்டும் நிருபித்து வருகிறார். அவரது மகன், மருமகன், அமைச்சர்களின் வளர்ச்சிக்காக மட்டும் ஆட்சி நடத்தப்படுகிறது.
கொடுமையான வாழ்க்கையுடன் விவசாயிகள் வாழ்கின்றனர். செய்யாறு அடுத்த மேல்மா சிப்காட் திட்டத்துக்கு மூன்று போகம் விளையக்கூடிய நிலங்களை கொடுக்க மறுத்த விவசாயிகளை திமுக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்தது. களத்தில் பாஜக இறங்க தயாரானதும் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டன. இந்தியாவில் விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை பதிவு செய்து கைது செய்தது திமுக அரசு மட்டும்தான். ஊழல் மலிந்த திமுக ஆட்சிக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அமைய உள்ளன.
சாதாரண மக்களுக்கும் பத்ம விருது... - இந்தியாவின் வளர்ச்சிக்கும், இந்தியாவின் வலிமைக்காக ஆட்சி நடத்தி வரும் பிரதமர் மோடி, 3-வது முறையாக மீண்டும் பிரதமாக வர வேண்டும். உலகளவில் மிகப் பெரிய பொருளாதார நாடாக 11-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளது. மோடியின் ஆட்சி, நேர்மையான ஆட்சி என பெயர் பெற்றுள்ளது. 2014, 2019-ல் பெரும்பான்மை இருந்தும், நாடாளுமன்ற சட்டத்தை இயற்றாமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு பிறகு ராமர் கோயிலை பிரதமர் மோடி கட்டி உள்ளார். ஆங்கிலேயர்கள் மற்றும் முகாலயர்கள் ஆட்சியில் தொலைத்த நமது நாட்டின் கலாச்சாரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மசூதியும் கட்டப்பட உள்ளது.
பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்முவை ஜனாதிபதியாக்கி, சமூக நிதியை நிலை நாட்டி உள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் பணக்கார நபர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த பத்ம விருதுகளை, சாதனை படைத்த சாதாராண மக்களுக்கும் வழங்கி கவுரவித்துள்ளார். ஏழை மக்களை நோக்கி மோடியின் ஆட்சி செல்கிறது. இண்டியா கூட்டணியில் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் இல்லை. பிரதமர் பதவிக்கு தகுதியானவர் மோடி மட்டுமே.
தொண்டர்கள் இல்லாத காங்கிரஸ்: கரூர், சிவகங்கையில் கூட்டம் நடத்தி ஜோதிமணிக்கும், கார்த்திக் சிதம்பரத்துக்கு மீண்டும் சீட் கொடுக்க வேண்டாம் என காங்கிரசார் கூறுகின்றனர். தொண்டர்கள் வெளியே சென்றுவிட்டனர், தலைவர்கள் மட்டும் காங்கிரசில் உள்ளனர்.
மக்களுக்காக உழைக்கக் கூடிய கட்சி பாஜக. மோடி கைகாட்டும் நபரிடம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியை கொடுங்கள். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து 39 எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டு நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். வந்தவாசியில் விஆர்எஸ் மற்றம் ஏபிஆர் நிதி நிறுவனத்தின் சொத்துகளை பறிமுதல் செய்து நீதிமன்றம் மூலம் முதலீடு செய்தவர்களிடம் ஒப்படைக்க டிஜிபியிடம் மனு அளித்து பாஜக போராடும். பாதிக்கப்பட்டவர்களுக்கு துணையாக இருக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT