Published : 05 Feb 2024 04:38 PM
Last Updated : 05 Feb 2024 04:38 PM
மதுரை: மதுரையில் ஆலோசனைக் கூட்டம் நடத்திய ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் மீது இபிஎஸ் வழக்கறிஞர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
மதுரை மாநகர மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை இன்று கொடுத்தனர். அதில், 'மதுரை காமராசர் சாலையிலுள்ள அருணாசலம் கமலாம்பாள் திருமண மண்டபத்தில் அதிமுகவில் இருந்து சட்டபூர்வமாக நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வம் தலைமையில், அவரது அணி சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதையொட்டி, அதிமுக கட்சி கொடியின் நிறங்களை குறிக்கும் வகையிலான சுவரோட்டி, பேனர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.
ஏற்கெனவே,சென்னை உயர்நீதிமன்ற வழக்கில் கட்சியில் இருந்து (அதிமுக) நீக்கப்பட்ட ஓபிஎஸ் கட்சி கொடி, இரட்டை இலை சின்னம், அதிமுக என்ற கட்சியின் பெயரையும், கழக ஒருங்கிணைப்பாளர் எனும் பொறுப்பையும் அவரோ, அவரை சார்ந்தவர்களோ பயன்படுத்தக் கூடாது என, தடை உத்தரவு பிறபிக்கப்பட்டது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவிலும் உயர், உச்ச நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுகளை மீறி கழக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரும், கட்சி கொடியை குறிக்கும் வகையில் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறம் கொண்ட எழுத்துகளையும் ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தி உள்ளனர். உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான செயல்களில் ஈடுபட்ட ஓபிஎஸ் தரப்பினர் மீது உரிய சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் தரப்பினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தும் நேரத்தில், இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT