Published : 05 Feb 2024 03:37 PM
Last Updated : 05 Feb 2024 03:37 PM

‘அய்யா... கொஞ்சம் உட்கார இருக்கை கொடுங்க, ப்ளீஸ்!’ - கெஞ்சும் வழக்காடிகள்... கண்டுகொள்ளாத நீதித்துறை!

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் ஆயிரத்து 266 கீழமை நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்த நீதிமன்றங்களுக்கு வழக்கு நிமித்தமாக அன்றாடம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். நீதித்துறையில் அங்கம் வகிக்கும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் தவிர விசாரணை கைதிகள், சாட்சிகள், போலீஸார், அரசு தரப்பு அதிகாரிகள், வழக்காடிகளும் அன்றாடம் நீதிமன்றங்களுக்கு வந்து செல்கின்றனர்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பெருநகர உரிமையியல் அமர்வு நீதிமன்றங்கள், சிறு வழக்குகளுக்கான நீதிமன்றங்கள், குடும்ப நல நீதிமன்றங்கள், ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான நீதிமன்றங்கள், சிபிஐ நீதிமன்றங்கள், மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான தீர்ப்பாயம், போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றங்கள், போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள், தொழிலாளர் நல தீர்ப்பாயம், மத்திய நிர்வாக தீர்ப்பாயம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சமரச இசைவு தீர்ப்பாயங்கள் என 80-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.

இதுதவிர மாவட்ட ஆட்சியர் அலுவலகமான ம.சிங்காரவேலர் மாளிகையில் எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் உள்ளன. அதன் அருகிலேயே குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் இயங்கி வருகிறது. மேலும் எழும்பூர், அல்லிக்குளம், சைதாப்பேட்டை, ஆலந்தூர், தாம்பரம், அம்பத்தூர் மற்றும் பூந்தமல்லியிலும் குற்றவியல் மற்றும் உரிமையியல் சார்ந்த நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.

இந்த கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகள் ‘பாஸ்-ஓவர்’ செய்து முன்னுரிமை அடிப்படையில் வழக்குகளை மாறி, மாறி விசாரிப்பதால் உயர் நீதிமன்றம்போல எந்த வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது. இதனால் வழக்கு விசாரணைக்காக காலை முதல் மாலை வரை பொதுமக்களின் கூட்டம் நீதிமன்றங்களில் நிரம்பி வழிகிறது.

அதுவே, குற்றவியல் நீதிமன்றங்கள் என்றால் தினந்தோறும் ஆஜர்படுத்தப்படும் விசாரணை கைதிகளால் திரும்பும் திசையெல்லாம் துப்பாக்கி ஏந்திய போலீஸார் நிறுத்தப்பட்டு கூட்டம் இன்னும் அதிகரித்து விடுகிறது.

இந்த நீதிமன்றங்களுக்கு வருகை தரும் வழக்காடிகள், சாட்சிகள், விசாரணை கைதிகள், குடும்ப நல வழக்குகளுக்காக ஆஜராகும் பெண்கள், அவர்களின் உறவினர்கள் நீதிமன்றத்தின் உள்ளேயோ அல்லது வெளியேயோ காத்திருப்பதற்கு சரியான இருக்கை வசதிகளோ, மின் விசிறிகளோ கிடையாது.

இதனால் வழக்கு விசாரணைக்காக அழைக்கப்படும் வரை நீதிமன்ற அறையின் வெளியே மணிக்கணக்கில் கால்கடுக்க காத்துக்கிடக்கும் அவலம் உள்ளது. சில நீதிமன்ற அறைகளின் உள்ளே பெஞ்சுகள் போடப்பட்டு இருந்தாலும் வழக்காடிகள் அமருவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அந்த இருக்கைகளை போலீஸாரும், வழக்கறிஞர்களும் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்.

வழக்கறிஞர் இ.ரவி

இதனால் வழக்காடிகள் நீதிமன்ற அறையின் வெளியே தரையில் அமரும் அவலம் உள்ளது. சில நேரங்களில் தரையில் அமருவதற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் வயதானவர்கள், பெண்கள் வழக்கு எப்போது விசாரணைக்கு வருவது... நாம எப்போது இங்கிருந்து செல்வது என மனதுக்குள்ளேயே பரிதவிக்க வேண்டியுள்ளது.

சில நீதிமன்றங்களில் நீதிமன்றத்துக்கு வருகை தரும் பொதுமக்கள் அமர வசதியாக நீதிமன்றத்தின் வெளியே பெஞ்சுகள் போடப்பட்டு இருந்தாலும் அவை போதுமானதாக இல்லை. மியூசிக் சேர் போட்டிபோல அதில் அமர்ந்து இருக்கும் நபர் எப்போது எழுந்து செல்வார்... எப்போது அந்த இடம் நமக்கு கிடைக்கும் என்ற ரீதியில் மணிக்கணக்கில் காத்திருந்து இடம் பிடிக்க வேண்டிய நிலைமை வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

இதுவே வழக்கு விசாரணைக்கு ஒரு விஐபி ஆஜரானால் நீதிமன்ற ஊழியர்களும், வழக்கறிஞர்களும் போட்டி போட்டு இருக்கை வசதியை செய்து கொடுக்கின்றனர். ஆனால் சாமானியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இதனால் நீதியை நிலைநாட்டும் நீதிமன்றங்களிலேயே இந்த நிலை உள்ளது வேதனைக்குரியது. இதைவிட கொடுமையான விஷயம், விசாரணை கைதிகளை அன்றாடம் சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வரும் பெண் போலீஸாருக்குத்தான் நிகழ்கிறது.

துப்பாக்கி ஏந்திய கையுடன் விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் தப்பாத வண்ணம் பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்படும் போலீஸார் நீதிமன்றங்களில் மணிக்கணக்கில் நிற்க நேரிடுகிறது. இதனால் இயற்கை உபாதைகளைக்கூட கழிக்க வழியின்றி பெண் போலீஸாரும் கால்கடுக்க நின்று கொண்டே தர்ம அவஸ்தையுடன் பணியாற்ற நேரிடுகிறது.

இதுதொடர்பாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இ.ரவி கூறும்போது, ‘‘சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டுமே பொதுமக்கள், வழக்காடிகள், அரசு அலுவலர்கள், போலீஸார் அமருவதற்கு என தனியாக இருக்கை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் மற்ற கீழமை நீதிமன்றங்களில் இந்த வசதிகள் கிடையாது.

இதற்கு ஒருசில நீதிமன்றங்கள் விதிவிலக்கு. நீதிமன்றத்துக்கு வருகை தரும் வழக்காடிகள், வயதானவர்கள் மற்றும் பெண்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என சட்டம் கூறுகிறது. நாள் முழுவதும் அவர்களை நீதிமன்றத்தின் வெளியே நிற்க விடுவதும் ஒருவகையில் தண்டனை வழங்குவது போலத்தான். அதுமட்டுமல்ல, கண்ணிய குறைபாடும் கூட.

வழக்கு விசாரணைக்காக ஆஜராகும் நபர்கள் வெகுநேரமாக நீதிமன்றத்தின் வெளியே நின்று கொண்டிருக்கின்றனர் என்ற விஷயம் நீதித்துறை அதிகாரிகளுக்கும் நன்றாக தெரியும் என்றாலும் அவர்களும் அதை கண்டுகொள்வது கிடையாது. பல நீதிமன்றங்களில் குடிக்க சரியான குடிநீர் வசதியோ அல்லது சுத்தமான கழிப்பறை வசதியோ இல்லை.

இருக்கும் கழிப்பறை பக்கம் சென்றாலே துர்நாற்றம்தான் வீசுகிறது. எனவே நீதித்துறை உயர் அதிகாரிகள், அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் அன்றாடம் நீதிமன்றங்களுக்கு வருகை தரும் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் நிம்மதியாக அமர தேவையான இருக்கை, மின்விசிறி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கண்டுகொள்ளுமா நீதித்துறை..!.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x