Published : 05 Feb 2024 01:43 PM
Last Updated : 05 Feb 2024 01:43 PM

“தமிழ்நாட்டிற்கு முடிந்தளவு உதவ வேண்டும்” - ஸ்பெயின் தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

ஸ்பெயினில் நடைபெற்ற நிகழ்வில் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஸ்பெயினில் நடைபெற்ற "ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்" எனும் நிகழ்வில் அந்நாட்டில் வாழும் தமிழர்களிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “உங்களின் தாய் மண்ணான தமிழ்நாட்டிற்கு முடிந்தளவு உதவ வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார். அதோடு, பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், ஸ்பெயினில் நடைபெற்ற "ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்" எனும் நிகழ்வில் அந்நாட்டில் வாழும் தமிழர்களிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நேற்று (4-02-2024) உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் இருக்கிறோமா அல்லது வெளிநாட்டில் இருக்கிறோமா என்று எனக்கு இப்போது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டிற்கு இப்போதுதான் நான் முதல்முறை வருகிறேன். ஆனால், பலமுறை வந்ததைப் போன்ற உணர்வைத் தரும் வரவேற்பை நீங்கள் அளித்திருக்கிறீர்கள். கடல் கடந்து வந்து வெளிநாட்டில் வாழும் உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நீங்கள் பிறந்த உங்களுடைய தாய் மண்ணான தமிழ்நாட்டிற்கு உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும், செய்து கொண்டிருக்கிறீர்கள், செய்யப் போகிறீர்கள், செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அயல்நாட்டில் இருக்கக்கூடியவர்களுக்காகவே துணை நிற்க வேண்டும் - உதவி புரிய வேண்டும் அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள், ஆபத்து ஏற்பட்டால், அதற்கு தமிழ்நாடு துணை நிற்க வேண்டும் என்ற அடிப்படையில்தான், தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த தலைவர் கருணாநிதி ஒரு அமைப்பை உருவாக்கினார். ஆனால் சில நாட்களுக்குள்ளாக ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. அதனால் அது செயல்படாமல் போய்விட்டது.

இப்போது மீண்டும் தலைவர் கருணாநிதி வழியில் நடைபோடும் நமது திராவிட மாடல் ஆட்சி உருவாகி இருக்கிறது. கருணாநிதி என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ, அதனை நாங்கள் செய்ய காத்திருக்கிறோம்; தயாராக இருக்கிறோம். அண்மையில் கூட, வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களைச் சென்னைக்கு வரவழைத்து, அவர்களுடன் கலந்து பேசி, இதுவரை அவர்களை இரண்டு மூன்று முறை அழைத்து கூட்டம் போட்டு கலந்து பேசி, அவர்களது பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து வைத்திருக்கிறோம்.

உலக முதலீட்டாளர் மாநாட்டை அண்மையில் வெற்றிகரமாக நடத்தி, அதன் மூலமாகத் தமிழ்நாட்டிற்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறோம். அது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; இந்தியாவிற்கு மட்டுமல்ல; இந்தியாவைக் கடந்து, இன்றைக்குக் கடல் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கும் அது பெருமைதான். பல்வேறு வெளிநாடுகளுக்குச் சென்று இருந்தாலும், ஸ்பெயின் நாட்டிற்கு வந்திருப்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன். என் மீது ஒவ்வொருவரும் பாசமும் நேசமும் அன்பும் கொண்டு அளித்த அந்த உபசரிப்பு என்னை நெகிழ வைத்து இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துக்களை இந்த நேரத்தில் தெரிவித்து, எனது உரையை நிறைவு செய்கிறேன்” என்றார். இந்நிகழ்வில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, முதல்வரின் செயலாளர் பு. உமாநாத்., ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் பட்நாயக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x