Published : 05 Feb 2024 06:06 AM
Last Updated : 05 Feb 2024 06:06 AM
சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக,பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை இணைக்கும் முயற்சியில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தீவிரமாக களமிறங்கியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதற்குள் இப்பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் வெற்றிபெற்று, தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியமைக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து ‘இண்டியா’ கூட்டணியை அமைத்தன. இக்கூட்டணியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை மேற்குவங்கம், பஞ்சாபில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், முக்கிய தலைவராக கருதப்பட்ட நிதிஷ் குமாரும் இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜகவுடன் சேர்ந்து பிஹாரில் ஆட்சி அமைத்துள்ளார். இந்த தொடர் நிகழ்வுகள், இண்டியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்த சூழலில், தமிழகத்தில் ஒரு தொகுதியில்கூட பாஜக வெற்றி பெற கூடாது என்ற முனைப்புடன் திமுக செயல்பட்டு வருகிறது. இதற்கான வியூகங்களையும் வகுத்து வருகிறது. தங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம்லீக், கொமதேக உள்ளிட்ட கட்சிகள் வெளியே சென்றுவிடாமல் இருக்க, அவர்களை தோழமையுடன் அனுசரித்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக நடத்தி வருகிறது.
இதற்கிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளை தக்கவைக்கவும், கூடுதலாக கட்சிகளை கூட்டணியில் சேர்க்கவும், தமிழகத்தில் குறிப்பிட்ட தொகுதிகளை கைப்பற்றவும் பாஜக தலைமை வியூகங்களை வகுத்து வந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் சரியில்லை என்றுகுற்றம்சாட்டிவிட்டு, தேசியஜனநாயக கூட்டணியில் இருந்து முக்கியகட்சியான அதிமுக வெளியேறியது. ஏற்கெனவே, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பாமக, தேமுதிக வெளியேறிய நிலையில், அதிமுகவும் வெளியே சென்றது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
‘‘தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முழுவதுமாக அதிமுக வெளியே வந்துவிட்டது. பாஜகவுடன் இனிமேல் ஒட்டும் இல்லை,உறவும் இல்லை’’ என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தொடர்ந்து திட்டவட்டமாக கூறிவருகிறார். மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் கவலையில்லை. மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுகவை தோல்வி அடைய செய்து, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே இலக்கு என்று கூறி வியூகங்களை அதிமுக வகுத்து வருகிறது.
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேவந்த கையோடு, மதுரையில் நடைபெற்றஎஸ்டிபிஐ மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பழனிசாமி, பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார். சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்துவிட கூடாது என்பதில் அவர்உறுதியாக உள்ளார். வரும் மக்களவை தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அக்கட்சியினர் நம்பிக்கையில் உள்ளனர்.
அதேநேரம், பாமக, தேமுதிகவுடன், திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளையும் தங்கள் பக்கம்கொண்டு வந்து, அதிமுக கூட்டணியை பலப்படுத்தவும் பழனிசாமி முயற்சி மேற்கொண்டு வருகிறார். திமுக கூட்டணியில் கேட்டதொகுதிகள் கிடைக்காத நிலையில், சில கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், புதியதமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பாஜக ஆதரவுநிலைப்பாட்டில் இருக்கும் நிலையில், வெளியேறிய கட்சிகளை ஒருங்கிணைத்து தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் தமாகா தலைவர் ஜி.கே.வாசனை பாஜக களமிறக்கியுள்ளது.
இதையொட்டி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தஜி.கே.வாசன், கூட்டணி ஒருங்கிணைப்பு தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் பதவிவழங்குவது உள்ளிட்டவை தொடர்பாக நட்டா உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அதிமுகவை மீண்டும் கூட்டணியில் சேர்க்க ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டார். பின்னர், அதிமுகபொதுச் செயலாளர் பழனிசாமியையும் சந்தித்து ஜி.கே.வாசன் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்நிலையில், டெல்லியில் பாமக தலைவர் அன்புமணியை வாசன் இன்று (பிப்.5) சந்தித்து, பாஜக கூட்டணியில் பாமகவை இடம்பெறச் செய்வது குறித்து பேச்சு நடத்த உள்ளார்.
மக்களவை தேர்தலில் 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது மட்டுமின்றி, தமிழகத்தில் கணிசமான இடங்களை பெற பாஜக தீவிர களப்பணி ஆற்றி வருகிறது.
இந்நிலையில், பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டா வரும் 11-ம்தேதி சென்னை வருகிறார். அப்போது, தேர்தல் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. அண்ணாமலை மேற்கொண்டு வரும் பாதயாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வரும் 18-ம் தேதிதமிழகம் வர உள்ளார். அதற்குள், பாஜக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிடும் என கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT