Published : 05 Feb 2024 06:12 AM
Last Updated : 05 Feb 2024 06:12 AM

முதல்வரின் அறிவிப்புடன் நிற்கும் மாட்டுத்தாவணி ‘டைடல் பார்க்’ - மதுரைக்கு பிறகு அறிவிக்கப்பட்ட திருச்சியில் பணிகள் மும்முரம்

மாட்டுத்தாவணி மைதானத்தில் டைடல் பார்க் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் நடந்த மண் பரிசோதனை.படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரை மாட்டுத்தாவணியில் ரூ.600 கோடியில் ‘டைடல் பார்க்’அமைக்கப்படும் என்ற முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பு, இதுவரைநிறைவேறவில்லை. அதேநேரத்தில், மதுரைக்குப் பிறகு திருச்சியில்அறிவிக்கப்பட்ட டைடல் பார்க் திட்டத்துக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பணிகள் மும்முரமாகியுள்ளன.

பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், மும்பை, ஜெய்ப்பூர், புனே,இந்தூர், காந்திநகர், டெல்லி போன்ற நகரங்களில் அதிக அளவில்மென்பொருள் நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து, கோவையில் ஓரளவு மென்பொருள் நிறுவனங்கள் செயல்படுகின்றன.

தென் மாவட்டங்களில் மதுரையில் ஹெச்.சி.எல்., ஹனிவெல், டிவிஎஸ் போன்ற சில மென்பொருள் நிறுவனங்கள் மட்டுமே கிளை அலுவலகங்களை கொண்டுள்ளன. எனினும், பெருநகரங்களைப்போல இங்கு அதிக ஊதியம் வழங்கப்படுவதில்லை. மேலும், மற்ற மாவட்டங்களில் மென்பொருள் துறை சார்ந்த நிறுவனங்கள் பெரிய அளவில் இல்லை. நெல்லை மாவட்டத்தில் ஜோஹோ நிறுவனக் கிளை இயங்கி வருகிறது.

இதனால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள், மென்பொருள் துறையில் வேலைவாய்ப்பு தேடி சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர்.

இந்நிலையில், மதுரை மட்டுமின்றி, தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மென்பொருள் நிறுவனங்கள் தொடங்க ஏதுவாக மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் டைடல் பார்க் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மதுரையில் 10.5 ஏக்கர் பரப்பில், எல்காட் உதவியுடன் மிகப் பெரிய டைடல்பார்க் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் எனவும் கூறப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியானவேகத்தில் மதுரை மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. எல்காட் அதிகாரிகள், அப்போதைய ஆட்சியர் அனீஸ்சேகருடன் கலந்தாலோசித்து, மாநகராட்சிக்கு சொந்தமான, மாட்டுத்தாவணியில் உள்ள நிலத்தில் முதல்கட்டமாக 5.5 ஏக்கர் நிலத்தை தேர்ந்தெடுத்தனர்.

அந்த நிலத்தை எல்காட் வசம் ஒப்படைக்க, நகராட்சி நிர்வாகத் துறைக்கு அனுமதி கோரப்பட்டது. ஆனால், தற்போது வரை நகராட்சி நிர்வாகத் துறை ஒப்புதல் வழங்கவில்லை. இன்னும் இந்த திட்டத்துக்கு நிலம் ஒதுக்கப்படாத நிலையில், டைடல் பார்க் திட்டத்துக்கான ‘கன்சல்டன்ட்’ நிறுவனம், மாட்டுத்தாவணியில் மண் பரிசோதனை செய்யும் பணியைத் தொடங்கியது. பின்னர், டைடல் பார்க் நிறுவனத்தின் வரைபடமும் தயாரானது.

ஆனால், இந்த வடிவமைப்பு ஒத்துவராததால், மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் அமைக்கும் முடிவை தமிழக அரசு தற்காலிகமாக தள்ளிவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், மதுரைக்குப் பிறகு திருச்சியில் அறிவிக்கப்பட்ட டைடல்பார்க்-ஐ, ரூ.600 கோடியில் அமைக்கதமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில், புதிய டைடல் பார்க் அமைகிறது. ஆனால், மதுரையில் எய்ம்ஸ்போலவே, டைடல் பார்க் திட்டமும்அறிவிப்போடு நிற்பதால், தென் மாவட்ட மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மதுரையில் அமைய உள்ள டைடல் பார்க்கில் மாநகராட்சியின் பங்களிப்பு 51 சதவீதம், தனியார் பங்களிப்பு 49 சதவீதம் இருக்கும்படியான வடிவமைப்பில், சில குறைபாடுகள்உள்ளன. அதை சரி செய்வதற்கான பணிகள் நடக்கின்றன. முதல்கட்டமாக ரூ.600 கோடி திட்ட மதிப்பில்,5 ஏக்கரில் டைடல்பார்க் அமைக்கப்படும், 2-ம் கட்டத்தில், மேலும் 5ஏக்கரில் விரிவாக்கப்படும். இந்த டைடல் பார்க் மதுரை மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x