Published : 05 Feb 2024 06:25 AM
Last Updated : 05 Feb 2024 06:25 AM

வாயுக்கசிவு ஏற்படுத்திய எண்ணூர் தொழிற்சாலை மீது சட்ட நடவடிக்கை: ரூ.5.92 கோடி இழப்பீடு வசூலிக்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: சென்னை எண்ணூரில் அமோனியா வாயுக்கசிவு ஏற்படுத்திய கோரமண்டல் உரத் தொழிற்சாலை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.5.92 கோடி சுற்றுச்சூழல் இழப்பீடு வசூலிக்க வேண்டும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: எண்ணூர் கோரமண்டல் உரத்தொழிற்சாலையில் கடந்த டிசம்பர் 26-ம் தேதி அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதற்கான காரணத்தை கண்டறிய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ஆர்.கண்ணன், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை சேர்ந்த பி.எம்.பூர்ணிமா, ஐஐடி பேராசிரியர் சங்கர் நரசிம்மன், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன மூத்த விஞ்ஞானி எஸ்.வி.சீனிவாசன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட தொழில்நுட்பக் குழுவை அரசு அமைத்தது.

இத்தொழில்நுட்பக் குழு தனது விரிவான ஆய்வு மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு எண்ணூர் கடற்கரைக்கு அருகில் உள்ள கோரமண்டல் உரத்தொழிற்சாலையின் கடலுக்கு அடியில் அமோனியா கொண்டு செல்லும் குழாயில் இருந்து அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது என்று முடிவு செய்துள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக குழாயைச் சுற்றியுள்ள கனமான கிரானைட் பாறைகள் நகர்ந்ததால் குழாயில் சேதம் ஏற்பட்டு அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று குழுவால் கணிக்கப்பட்டுள்ளது.

'சேதமடைந்த குழாய்க்கு பதில் புதிய குழாய்களை அதிநவீன கண்காணிப்பு, தானியங்கி கட்டுப்பாடு மற்றும் விபத்து தடுப்பு சாதனங்களுடன் அமைக்கப்பட வேண்டும் கடலில் இருந்து சாலை வழியாக தொழிற்சாலைக்கு அமோனியா வாயு கொண்டு செல்லும் இடத்தில் குழாய்களை பொது மக்கள் யாரும் அணுகா வண்ணம் உரிய பாதுகாப்பு அமைப்புகளுடன் இருப்பதை தொழிற்சாலை உறுதி செய்ய வேண்டும்' என்பன உள்ளிட்ட 18 பரிந்துரைகளை இக்குழு தொழிற்சாலைக்கு வழங்கியுள்ளது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு வழங்கப்பட்ட பரிந்துரையில், "தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.5.92 கோடியை சம்பந்தப்பட்ட தொழிற்சாலை உடனடியாக செலுத்துவதற்கு வாரியம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

காற்று (தடுப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிபந்தனைகளை தொழிற்சாலை செயல்படுத்தாததால் தொழிற்சாலையின்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பக் குழுவின் மேற்கண்ட அறிக்கையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அரசிடம் சமர்ப்பித்துள்ளது. குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டு, தொழில்நுட்பக் குழுவின் அனைத்துப் பரிந்துரைகளையும் உடனடியாக அமல்படுத்தி, அறிக்கை அளிக்குமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x