Published : 26 Feb 2018 07:15 PM
Last Updated : 26 Feb 2018 07:15 PM

பிரிட்டனில் தமிழர்களுக்கு கொலை மிரட்டல்: இலங்கைக்கு தப்பி வந்த ராணுவ அதிகாரி மீது விசாரணை நடத்த கோரிக்கை

இலங்கையின் 70வது ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம் பிரிட்டனில் உள்ள அந்நாட்டுத் தூதரகத்தில் கடந்த பிப்ரவரி 4 அன்று நடைபெற்றது. அப்போது, இலங்கைப் போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, அந்நாட்டைச் சேர்ந்த ஈழத் தமிழர்கள் பலர் தூதரகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த இலங்கை தூதரக ராணுவப் பாதுகாப்பு ஆலோசகர் பிரியங்க பெர்னான்டோ, தமிழர்களைப் பார்த்து ‘கழுத்தை அறுத்து விடுவேன்’ என்பது போல சைகை காட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூதரக அதிகாரிகளுடன் இலங்கை தமிழர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதனிடையே, ராணுவ அதிகாரி பிரியங்க பெர்னான்டோ சைகை காண்பித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து, அவரை பணி நீக்கம் செய்யக் கோரி பிரிட்டன் அரசுக்கு இலங்கை வம்சாவளி எம்.பி.க்கள் கடிதம் எழுதினர்.

தொடர்ந்து, ராணுவ அதிகாரி பிரியங்க பெர்னான்டோவை சஸ்பெண்ட் செய்து இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டதுடன் அவர் மீது துறை ரீதியிலான விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தது. ஆனால் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பிரியங்க பெர்னான்டோவை இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவின்படி மீண்டும் பணி வழங்கப்பட்ட்டது.

இலங்கை வெளியுறவுத்துறையால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிரியங்க பெர்னாண்டோவிற்கு மீண்டும் பணி வாய்ப்பு அளித்தது இலங்கைத் தமிழர்களையும், பிரிட்டனில் வாழும் தமிழர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் பிரிட்டனில் உள்ள இலங்கை வம்சாவளி எம்.பிக்களும், அங்குள்ள ஈழத்தமிழர்களும் பிரிட்டன் நீதிமன்றத்தின் மூலம் பிரியங்க பெர்னாண்டோவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இதனை அறிந்து கொண்ட பிரியங்க பெர்னான்டோ பிரிட்டனிலிருந்து தப்பி விமானம் மூலம் சனிக்கிழமை இலங்கைக்கு வந்தடைந்தார். தற்போது இலங்கையில் உள்ள பிரியங்க பெர்னான்டோ மீது இலங்கை வெளியுறவுத்துறை அறிவித்தவாறு விசாரணை நடத்த வேண்டும் என இலங்கையில் உள்ள பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போது அந்நாட்டு ராணுவத்தில் பணியாற்றிய பிரியங்க பெர்னான்டோ பல்வேறு போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x