Last Updated : 04 Feb, 2024 09:23 PM

 

Published : 04 Feb 2024 09:23 PM
Last Updated : 04 Feb 2024 09:23 PM

“அமலாக்கத் துறை கதவை தட்ட தேவையில்லை; நாங்கள் திறந்தே வைத்துள்ளோம்” - அமைச்சர் துரைமுருகன்

அமைச்சர் துரைமுருகன்

காட்பாடி: எங்கள் வீட்டு கதவை அமலாக்கத் துறை தட்ட தேவையில்லை. அதை நாங்கள் திறந்தே வைத்திருக்கிறோம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி காங்கேயநல்லூரில் இருந்து பாலாறு வரை உள்ள பாண்டியன் மடுவு கால்வாய் ரூ.6 கோடியே 32 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. நிகழ்ச்சியில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை வகித்து கால்வாய் சீரமைப்புப்பணிக்கான அடிக்கல்லை நாட்டினார்.

அப்போது அவர் கூறியதாவது, ‘‘ பாண்டியன் மடுவு பாலாற்றில் இணையும் வரை 12.70 கி.மீ நீளத்துக்கு கால்வாய் அகலப்படுத்தி தூர்வாருவது, கால்வாயின் இருபுறங்களிலும் எல்லை கற்கள் பதிக்கும் பணிகள், காங்கேயநல்லூர், பிரம்மபுரம், சேவூர், கார்ணாம்பட்டு, அம்முண்டி ஆகிய கிராமங்களில் பாண்டியன் மடுவு கால்வாயின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும் பழுதடைந்துள்ள 5 பாலங்களை புனரமைக்கும் பணிகள் மற்றும் 5 நேரடி பாசன கால்வாய்கள் 10.60 கி.மீ. நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பாண்டியன் மடுவு கால்வாய் புனரமைப்பு பணிகள் முடிந்தால் மழை காலங்களில் ஏற்படும் வெள்ள நீர் கால்வாயில் தங்கு தடையின்றி செல்வதுடன், அருகில் இருக்கும் விளைநிலங்களுக்கு தண்ணீர் புகாமல் இருக்கும்.

இந்த பணிகள் முடிவுற்றால் காங்கேயநல்லூர் கிராமம் முதல் அம்முண்டி வரை கால்வாயில் இருபுறமும் 6 கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இது தவிர குடிநீர் வசதி மற்றும் 901.55 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். அதேபோல, காவனூர் ஏரி நிரம்பும் போது அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் செல்ல கால்வாய் வசதி இல்லை. இதற்காக தனியாரிடமிருந்து நிலம் பெறப்பட்டு கால்வாய் அமைக்கப்பட உள்ளது. கழிஞ்சூர், தாராபடவேடு ஏரிகள் தூர்வாரப்பட்டு பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் புனரமைக்கப்பட்டு வருகிறது.

திமுகவின் இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் காட்பாடி தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொன்னை பகுதியில் மட்டும் பொன்னையாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம், பரமசாத்து அருகில் தடுப்பணை, மேல்பாடியில் தரைமட்ட பாலம், குயைநல்லூரில் ஒரு தடுப்பணை என பொன்னை பகுதியில் மட்டும் 4 பெரிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

பாலாற்றிலும் நான்கு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் மழைக் காலங்களில் தண்ணீர் வீணாகாமல் பாலாற்றில் தேங்கி நிற்கும். மேலும் அருகில் உள்ள கிராமங்களின் கிணறுகளில் நீர்மட்டம் உயரும்.

காட்பாடி பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் மகிமண்டலத்தில் இந்த ஆண்டு சிப்காட் தொடங்கப்பட உள்ளது. காட்பாடி தொகுதி மக்களுக்கு தேவையான வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் தொடர்ந்து நிறைவேற்றப்படும்’’ இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி, துணை மேயர் சுனில்குமார், மேல் பாலாறு வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், 1-வது மண்டலக்குழுத் தலைவர் புஷ்பலதா வன்னியராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அளித்த பதில் வருமாறு:

  • நடிகர் விஜய் கட்சி தொடங்கியது குறித்து? யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். எந்த கட்சியிலும் சேரலாம்.
  • 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி ? நேரம் வரும் போது நாங்களே அதைப்பற்றி தெரிவிப்போம்.
  • மார்க்ஸ்சிஸ்ட் கட்சி அதிக இடம் கேட்பதாக தகவல் வருகிறதே? இது போன்ற வதந்திகளுக்கு எல்லாம் நான் பதில் அளிக்க மாட்டேன். அப்புறம் துரைமுருகன் சொன்னாரே என்று குட்டையை குழப்புவீர்கள்.
  • வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத் துறை கதவை தட்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறாரே? ஏன் தட்டுகிறார்கள். அந்த கஷ்டமே அவர்களுக்கு வேண்டாம். நாங்கள் கதவை எப்போதுமே திறந்தே வைத்திருக்கிறோம்.
  • தமிழகம் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கிறது என அண்ணாமலை கூறியிருக்கிறாரே? அவர் என்ன பெரிய எக்கனாமிஸ்டா? (பொருளாதார வல்லுநர்) பெரிய, பெரிய ஆட்களே நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x