Published : 04 Feb 2024 06:25 PM
Last Updated : 04 Feb 2024 06:25 PM
மதுரை: எம்ஜிஆர் முதல் ஜெயலலிதா காலம் வரை, மதுரை மாவட்டம் அதிமுகவுக்கு செல்வாக்குள்ள மாவட்டமாக இருந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி கே.பழனிசாமி காலத்தில் நடந்த கடந்த சட்டசபை தேர்தலில் கூட அதிமுக ஆட்சியை இழந்தாலும், மதுரையில் மொத்தமுள்ள 10 சட்டசபை தொகுதிகளில் 5 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. மற்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு சவாலான வாக்குகளை அதிமுக பெற்றிருந்தது. அதனால், திமுக ஆளும் கட்சியாகவே இருந்தாலும் மதுரை மாவட்டத்தில் அக்கட்சிக்கு இணையாக அதிமுக வலுவாகவே உள்ளது.
தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்கவிட்ட நிலையில் தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்ற மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பும், விவாதமும் அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த மதுரை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்தியனுக்குதான் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது திடீரென்று சமீபத்தில் பாஜகவில் இருந்து அதிமுகவிற்கு வந்த டாக்டர் சரவணனுக்கு ‘சீட்’ கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இவருக்கு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார் ஆகியோர் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.
திமுகவில் இருந்த டாக்டர் சரவணன், கடந்த சட்டசபை தேர்தல் நேரத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட ‘சீட்’ கொடுக்காததால் அதிருப்தியடைந்து, திடீரென்று பாஜக பக்கம் தாவினார். பாஜகவில் சேர்ந்த மறுநாளே அவருக்கு ‘சீட்’ வழங்கப்பட்டு மதுரை வடக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அங்கு கணிசமான வாக்குபெற்றாலும் திமுக வேட்பாளர் தளபதியிடம் தோல்வியடைந்தார். அதன்பிறகு பாஜக மாவட்டத் தலைவராகி, அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலையுடன் நெருக்கமாகவும், செல்வாக்காகவும் இருந்தார்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் மோதல் ஏற்படவே, அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் திமுகவிற்கு செல்வதற்கு அமைச்சர் பழனிவேல் ராஜனிடம் தஞ்சம் புகுந்தார். அவரும் டாக்டர் சரவணனை திமுகவில் சேர்க்க பெரும் முயற்சி செய்தார். ஆனால், அவரை திமுகவில் சேர்க்க உள்ளூர் கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே, கட்சித் தலைமை சரவணனை மீண்டும் கட்சியில் சேர்க்க ஒப்புக்கொள்ளவில்லை. அதனால், வேறுவழியில்லாமல் அதிமுகவில் சமீபத்தில் சேர்ந்தார். பண பலமிக்க அவர் தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறி வருவதால் அவர் எந்த கட்சியில் சேர்ந்தாலும் அக்கட்சியினர் அவர் நிலையாக கட்சியில் தொடர்வார் என்று நம்பகத்தன்மை வைத்திருப்பதில்லை. தற்போது அதிமுக எதிர்க்கட்சியாக இருப்பதால் மக்களவைத் தேர்தலில் ஆளும் கட்சியான திமுகவை எதிர்த்து வெற்றிப்பெற தேர்தல் செலவுகளுக்கு, அக்கட்சி சார்பில் போட்டியிடும் பணபலமிக்க வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதனால், கட்சித் தலைமை குறிப்பிட்ட தொகையை நிர்ணம் செய்து, இந்த பணத்தை செலவு செய்பவர்களுக்கு மட்டுமே கட்சியில் ‘சீட்’ என கறாராக கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த தேர்தலில் நிச்சய வெற்றி கிடைக்குமா? என்பதை உறுதியாக கூற முடியாத நிலையில் அந்த பணத்தை செலவு செய்வதற்கு அதிமுக முக்கிய நிர்வாகிகள் தயாராகவில்லை. ஆனால், அந்த பணத்தை செலவு செய்வதற்கு டாக்டர் சரவணன், கட்சித் தலைமையிடம் ஒப்புக் கொண்டுள்ளார். அதனால், தற்போது மதுரை வேட்பாளர் பந்தயத்தில் டாக்டர் சரவணன் முந்துகிறார். ராஜன் செல்லப்பா, கட்சித் தலைமை கூறும் தொகையை செலவு செய்வதற்கு தயாரானால், அவரது மகன் ராஜ் சத்யன் மீண்டும் மதுரையில் போட்டியிட வாய்ப்புள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் உள்கட்சியினர் உள்குத்து வேலையாள் ராஜ் சத்யன் தோல்வியடைந்தாலும், அரசியலில் துவண்டு ஒதுக்கிவிடாமல் அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமியின் நிழலாக முன்பைவிட தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தந்தை ராஜன் செல்லப்பா மாவட்ட அளவிலேயே அரசியல் செய்து வந்தநிலையில் அவரது மகன், ராஜ் சத்யன், அதிமுக ‘ஐடி விங்’ பிரிவை கையில் எடுத்துக் கொண்டு கே.பழனிசாமி மனதறிந்து செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது உள்ளூர் கட்சி நிகழ்ச்சிகளிலும், தொண்டர்கள் இல்ல விழாக்களிலும் பங்கெடுத்து வருகிறார்.
இற்கிடையில், ராஜன் செல்லப்பா, தனது மகன் மீண்டும் மதுரையில் போட்டியிட்டால் சொந்த கட்சியினர் உள்குத்து வேலையை சமாளிக்க முடியாது என்பதால் தான் எம்எல்ஏ ஆக உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியை உள்ளடக்கிய விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு ‘சீட்’ கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால், அம்மாவட்ட செயலாளர் ராஜேந்திர பாலாஜி ராஜன் செல்லப்பாவின் இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டையாக நிற்கிறார். அவர், ஆதரவு நிர்வாகி சிவகாசியை சேர்ந்த ஒருவரை நிற்க வைக்க முயற்சி செய்கிறார். ஆனால், கட்சித் தலைமையோ ராஜ் சத்யன் அல்லது முன்னாள் அமைச்சர் மா.ஃபா.பாண்டியராஜனை நிறுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், மகனுக்கு ராஜ்சத்யனுக்கு கொடுக்க கே.பழனிசாமி விருப்பப்படும்நிலையில் தேர்தல் செலவுகளை அவர் ஒத்துக்கொள்ளும்பட்சத்திலேயே அவர் மதுரை அல்லது விருதுநகர் வேட்பாளராக முடியும். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார் ஆகியோர் இந்த முறை டாக்டர் சரவணனுக்கு ‘சீட்’ வழங்க ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுவதால் ராஜ் சத்யனா? டாக்டர் சரவணனா? என்ற விவாதமும், எதிர்பார்ப்பும், மதுரை மாவட்ட அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT