Published : 04 Feb 2024 03:54 PM
Last Updated : 04 Feb 2024 03:54 PM
மதுரை: தமிழ்நாடு சீருடைய பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி எஸ்ஐக்களாக தேர்வு செய்யப்படுவோருக்கு குறிப்பிட்ட காலத்தில் படிப்படியாக பதவி உயர்வு என்பது அளிக்கப்படுவது வழக்கம். கடந்த 1997-ம் ஆண்டு நேரடி எஸ்ஐக்களாக தேர்வு செய்யப்பட்டவர்களில் சுமார் 80-க்கும் மேற்பட்டோருக்கு ஒரு பதவி உயர்வு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் 2008 முதல் தொடர்ந்து 16 ஆண்டாக காவல் ஆய்வாளர்களாகவே பணிபுரிகின்றனர். இவர்களுக்கான டிஎஸ்பி பதவி உயர்வு பட்டியல் ஓராண்டுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
இப்பட்டியலிலுள்ள ஆய்வாளர்களுக்கு டிஎஸ்பிக்கான பயிற்சியும் சென்னையில் வழங்கப்பட்டது. இந்த பயிற்சி முடிந்து ஓராண்டை தாண்டியும் பதவி உயர்வு இன்றி தவிக்கின்றனர். பயிற்சிக்கு பிறகு உரிய நேரத்தில் பதவி உயர்வை பெற முடியாமலும், அதற்கான ஊதிய உயர்வு, டிஎஸ்பி சீருடை அணிய முடியாமல் பணியாற்றுகின்றனர். 1997 தங்களுடன் பயிற்சி பெற்ற நேரடி டிஎஸ்பிக்கள் 5 கட்ட பதவி உயர்வை பெற்று, கூடுதல் டிஜிபி வரை உயர்ந்துவிட்டனர். ஆனால், நாங்கள் மட்டும் ஒரு பதவி உயர்வுடன் ஆய்வாளர்களாகவே பணிபுரியும் நிலையில் இருப்பதாகவும் புலம்பு கின்றனர்.
டிஜிபி அலுவலகத்தில் கிடப்பில் கிடக்கம் எங்களுக்கான பதவி உயர்வு பட்டியல் மீது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சில ஆய்வாளர்கள் கூறுகையில், “எங்களது பேட்ஜில் தேர்வான சிலர் வயது முதிர்வாலும், உரிய நேரத்தில் பதவி உயர்வு இன்றி காவல் ஆய்வாளராகவே ஓய்வு பெற்றனர். எஞ்சியவர்களுக்கும் அதே நிலை உருவாகுமோ என, அச்சம் உள்ளது. பணியில் சேர்ந்து சுமார் 27 ஆண்டாக ஒரே பதவி உயர்வு ( ஆய்வாளர் ) மட்டுமே பெற்றுள்ளோம்.
எங்களுடன் காவல் துறை பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற குரூப்- 1 டிஎஸ்பிக்கள் ஐஜி, ஏடிஜிபி வரை பதவி உயர்வு பெற்றுவிட்டனர். அவர்களுக்கு மட்டும் அந்தந்த காலத்தில் உரிய பதவி உயர்வு அளிக்கும் காவல் துறை உயரதிகாரிகள், அரசு எங்களை வஞ்சிக்கிறதா?. இருப்பினும், டிஎஸ்பி பதவி உயர்வுக்கான பயிற்சி முடித்தும் ஓராண்டுக்கு மேலாகியும் சுமார் 80 பேர் ஆய்வாளர்களாக தொடரும் நிலையில் உள்ளோம். மக்களவை தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரத்தில் அறிவிக்கப்படலாம்.
அதற்குள் எங்களுக்கான பதவி உயர்வு உத்தரவு கிடைக்காவிடின் தேர்தல் நடத்தை அமலுக்கு வந்துவிடும். அடுத்த 6 மாதத்திற்கு மேல் காத்திருக்கும் சூழல் ஏற்படும். எனவே, விரைவில் பதவி உயர்வுக்கான உத்தரவை வழங்க தமிழக அரசு மற்றும் காவல் துறை உயர் அதிகரரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT