Published : 04 Feb 2024 03:22 PM
Last Updated : 04 Feb 2024 03:22 PM

திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக பங்கேற்பு

திமுக தொகுதி பங்கீடு குழுவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்

சென்னை: திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதிமுக இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இரண்டு மக்களவை இடங்கள், ஒரு மாநிலங்களவை இடங்களைக் கேட்டுள்ளதாக மதிமுக பேச்சுவார்த்தைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

திமுக தொகுதி பங்கீட்டுக்குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. மத்தியக் குழு உறுப்பினர் சம்பத் தலைமையிலான குழுவினர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். திமுக தொகுதி பங்கீட்டுக்குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட விரும்பும் தொகுதிகளின் உத்தேசப் பட்டியலை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர், " திமுக தொகுதி பங்கீட்டுக்குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. இருதரப்பிலும் மனம்திறந்து எங்களுடைய கருத்துகளை பரிமாறிக் கொண்டோம்.

ஒவ்வொரு கட்சிக்குமே கூடுதலான இடங்களில் போட்டியிடுவதற்கு விரும்பும். நாங்களும் கடந்த தேர்தலைவிட அதிகமான இடங்களில் போட்டியிடுவது தொடர்பான எங்களது கோரிக்கையை முன்வைத்தோம். பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்கிறது. கட்டாயமாக, இருதரப்பிலும் சுமூகமான நல்ல உடன்பாடு ஏற்படும் நம்பிக்கை இருக்கிறது" என்று தெரிவித்தனர்.

இதேபோல், மதிமுக தரப்பிலும் இன்று திமுக தொகுதி பங்கீட்டுக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக அவைத்தலைவர் அர்ஜூன்ராஸ் கூறியதாவது: "பேச்சுவார்த்தை சுமூகமாக, மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள், இரண்டு மக்களவைத் தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை இடமும் கேட்டிருக்கிறோம். வெளிநாடு பயணம் முடித்து முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திரும்பியபிறகு, இறுதி முடிவு தெரியவரும்.

தொகுதிகள் எதுவும் தற்போது முடிவு செய்யவில்லை. இனிமேல்தான் அதை முடிவு செய்வோம். இந்தமுறை எங்களுடைய கட்சி சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று கோரிக்கை வைத்துள்ளோம். எங்களது கட்சியின் நிலைப்பாடு, தனி சின்னத்தில், அதாவது எங்களுடைய கட்சியின் சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x