Published : 04 Feb 2024 09:32 AM
Last Updated : 04 Feb 2024 09:32 AM
சென்னை: மாணவர்கள் படியில் தொங்கி பயணிப்பதைத் தடுக்க 200 பேருந்துகளில் தானியங்கி கதவு அமைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கி பயணம் செய்து விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க முதற்கட்டமாக 200 பேருந்து படிக்கட்டுகளில் தானியங்கிக் கதவுகள் பொருத்துவதற்கு ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீதமுள்ள பேருந்துகளுக்கும் படிப்படியாக தானியங்கி கதவுகள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், மாணவர்கள் படிகளின் அருகே உள்ள ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கிக் கொண்டு பயணம் செய்வதைத் தடுக்க, முன் மற்றும் பின் பக்கங்களில் படி கட்டுகளின் அருகே உள்ள ஜன்னல்களுக்கு நிரந்தரமாகக் கண்ணாடி பொருத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், கதவுகள் பொருத்தப்படாத பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப் பட்டுள்ளன. அதன்படி, பேருந்து நிறுத்தங்களிலிருந்து பேருந்தை நகர்த்தும் முன்னர், ஓட்டுநர் கண்ணாடி மூலம் பயணிகள் யாராவது ஓடிவந்து ஏற முயற்சிக் கின்றனரா என கவனித்தும், படிக்கட்டில் ஏற முயல்பவர்களை நடத்துநர் கண்காணித்தும் பயணிகளை ஏற்றிய பிறகு பேருந்தை இயக்க வேண்டும்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தால் அவர்களுக்கு நடத்துநர் தக்க அறிவுரை மற்றும் எச்சரிக்கை செய்து பேருந்துக்கு உள்ளே வர நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து ஆபத்தான முறையில் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால், பேருந்தை சாலை ஓரம் நிறுத்தி மாணவர்கள் பேருந்து உள்ளே வந்த பிறகு இயக்க வேண்டும். மீண்டும் அதே முறையில் பயணம் செய்பவர் மீது அருகில் உள்ள போக்கு வரத்து காவலர் அல்லது காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். பேருந்து நிறுத்தம் வருவதை நடத்துநர் முன் கூட்டியே தெரிவித்து பயணிகளை இறங்க தயார் படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT