Published : 04 Feb 2024 05:43 AM
Last Updated : 04 Feb 2024 05:43 AM

சென்னைக்குள் ஆம்னி பேருந்துகளை அனுமதிக்க வேண்டும்: அரசுடனான பேச்சுவார்த்தையில் உரிமையாளர்கள் வலியுறுத்தல்

சென்னை: சென்னை நகரப் பகுதிகளுக்குள் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை, கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என தமிழக அரசும், அவ்வாறு இயக்க அவகாசம் வேண்டுமென உரிமையாளர்கள் தரப்பிலும் கூறப்பட்டு வந்தது. இதற்கிடையே, ஜனவரி 24-ம் தேதி முதல் நகருக்குள் பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், சிஎம்டிஏ அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆணையர் அ.சண்முகசுந்தரம் ஆகியோர் உத்தரவிட்டனர். மீறுவோர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தல்கள் வழங்கியிருந்தனர்.

மேலும், நகருக்குள் வந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையும் தொடர்ந்தது. இதையடுத்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உயர்நீதிமன்றத்தை நாடினர். இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என உயர்நீதிமன்றமும் அறிவுறுத்தியது.

இதன் தொடர்ச்சியாக சென்னை, எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, போக்குவரத்துத் துறை ஆணையர் அ.சண்முகசுந்தரம், விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய நிர்வாக அலுவலர் ஜெ.பார்த்தீபன், ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் அ.அன்பழகன், டி.கே.திருஞானம், ஏ.அப்சல், டி.மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் உரிமையாளர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்: சங்க உறுப்பினர்கள் சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருக்கக்கூடிய அலுவலகம் மற்றும் பணிமனைகளில் ஆம்னி பேருந்துகளை பராமரித்து, பின் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நகர் பகுதிகள் வழியாக கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் சென்று பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் டிராவல்ஸ் நிறுவனங்களுக்கும், பயணிகளுக்கும் ஏற்றவாறு கோயம்பேட்டில் உள்ளது போல தரைத்தளத்தில் 100-க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் தர வேண்டும். ஆம்னி பேருந்துகளுக்கு நடைமேடை டிராவல்ஸ் நிறுவனங்கள் வாரியாக ஒதுக்காமல் பயணிகளை ஏற்றுவதற்கு ஏதுவாக அரசு பேருந்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நடைமேடை போல் ஊர்வாரியாக ஒதுக்க வேண்டும்.

தமிழகத்தின் தென் பகுதிகளில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்துகள் வரும்போது கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், சென்னை நகர் பகுதிகள் மற்றும் பணிமனைகளில் ஆம்னி பேருந்து பயணிகளை இறக்கி விடுவதற்கு அனுமதிக்க வேண்டும். ஜன.24-ம் தேதிக்கு முன் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் மற்றும் டிராவல்ஸ் நிறுவன அலுவலகங்கள், சென்னை நகர் பகுதிகளில் பயணிகளை ஏற்ற இறக்க அனுமதித்தது போல் தற்போதும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் டிராவல்ஸ் நிறுவன அலுவலகங்களிலும் சென்னை நகர் பகுதிகளிலும் பயணிகளை ஏற்ற இறக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிறகு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்றது. பயணிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தோம். 2 நாட்களில் ஆலோசனை நடத்தி முடிவை தெரிவிப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்’’என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x