Published : 04 Feb 2024 05:59 AM
Last Updated : 04 Feb 2024 05:59 AM
சென்னை: மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக சென்னையில் வரும்12-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமாகா மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், அணித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சென்னை தியாகராய நகரில் நேற்று நடைபெற்றது. முன்னதாக ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உடனான சந்திப்பு நட்பு ரீதியானது. இதேபோல, நேற்று முன்தினம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் தொலைபேசியில் பேசினேன். இரு நாட்களுக்கு முன்பு மக்களவையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தேன். நாளை மறுதினம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸையும் நாடாளுமன்றத்தில் சந்தித்துப் பேச இருக்கிறேன்.
2021 தேர்தலின்போது இணைந்து செயல்பட்டவர்களிடம் இதுவரை நட்பு ரீதியாக செயல்பட்டு வருகிறோம். தமாகா எந்த கூட்டணியில் இருந்தாலும், மத நல்லிணக்கத்தை நிலைநாட்டும் கட்சியாகத்தான் இருக்கும். குறிப்பாக, சிறுபான்மையினருக்கு பாதுகாவலனாக இருக்கும்.
தமாகா பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் எழும்பூரில் வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் விவாதித்து, மக்களவைத் தேர்தலில் தமாகாயாருடன் கூட்டணி வைக்கிறதுஎன்பது குறித்து ஆலோசிக்கப்படும். பின்னர் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து, கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.
அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய்க்கு எனதுமனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நடிகர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்ததுபோல, நிர்வாகச் சீர்கேடுகள், ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்தான் திமுக ஆட்சியில் நிலவி வருகிறது.
தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளில் பெரும் பாலானவற்றை திமுக நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி பொதுச் செயலாளர் விடியல் சேகர், இளைஞரணித் தலைவர் யுவராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT