Published : 03 Feb 2024 04:57 AM
Last Updated : 03 Feb 2024 04:57 AM
சென்னை: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிப்.13-ம்தேதி சென்னை வருகிறார். அப்போது, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீட்டை இறுதி செய்கிறார்.
மக்களவை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை முதன்மையாக கொண்டு ‘இண்டியா’ கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் திமுக உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இக்கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் பல்வேறு மாநிலங்களில் உள்ள கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து தொகுதி உடன்பாடு தொடர்பாக பேசி இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இண்டியா கூட்டணியில் தமிழகத்தை பொருத்தவரை, திமுக தலைமையில் கூட்டணிக் கட்சிகள் இணைந்துள்ளன. திமுக சார்பில் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவுடன், கடந்த மாத இறுதியில் காங்கிரஸ் சார்பில் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். வரும் 9-ம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ் 13 தொகுதிகள் வரைகேட்பதாக கூறப்படுகிறது. இந்த முறை மநீம கட்சியை கூட்டணியில் சேர்ப்பதாலும், கூடுதல் இடங்களில் திமுக போட்டியிட விரும்புவதாலும் தமிழகத்தில் 7, புதுச்சேரியில் 1என 8 தொகுதிகளை தருவதாக திமுக தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், காங்கிரஸ் தலைவர் கார்கே 13-ம் தேதிதமிழகம் வருகிறார். சென்னையில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் அவர், தொடர்ந்து, முதல்வர்ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்.
இந்த சந்திப்பின்போது, காங்கிரஸுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிடும். அதன்பிறகு, போட்டியிடும் தொகுதிகள் பேசி முடிவெடுக்கப்படும் என்று இரு கட்சிகளின் வட்டாரங்களும் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT