Published : 27 Feb 2018 02:09 PM
Last Updated : 27 Feb 2018 02:09 PM
சென்னை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் ஸ்கூட்டி முதல் ஹார்வி டேவிட்சன் பைக் வரை வாடகைக்கு எடுத்துச் செல்லும் நிலை வந்துள்ளது.
இதற்காக எஸ்எப்ஏ என்ற தனியார் இருசக்கர வாகன நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கெனவே வாடகை சைக்கிள் திட்டம் அறிமுகப்படுத்தகப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், விரைவில் பைக், ஸ்கூட்டர் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் 'ஸ்கூட்டி பெப்', ‘ஸ்கூட்டி ஸ்ட்ரீக்’, ‘பஜாஜ் டிஸ்கவர்’, ‘ ஸ்பிலென்டர்” , ‘ஹோண்டா ஆக்டிவா’, ‘யமஹா ரே’, ‘பஜாஜ் பல்சர்’, ‘ஹோண்டா யுனிகார்ன்’, ‘பஜாஜ் அவெஞ்சர்’, ‘ராயல் என்பீல்ட்’ ‘தண்டர்பேர்டு’, ‘ராயல் என்பீல்ட் கிளாசிக்’, ‘என்பீல்ட் எலெக்ட்ரா’, ‘ஹார்லி டேவிட்சன்’ ஆகிய பைக்குகள் வாடகைக்கு வந்துள்ளன.
ஒவ்வொரு விதமான இருசக்கர வாகனத்துக்கும் ஒவ்வொரு விதமான கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. திருமங்கலம் முதல் சென்னை விமான நிலையம் வரை எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலும் பயணிகள் தங்களுக்கு தேவையான இரு சக்கரவாகனத்தை தேர்வு செய்து பயணிக்கலாம்.
இதற்காக எஸ்எப்ஏ பைக்ஸ் நிறுவனம் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 8 வகையான இருசக்கர வாகனங்களையும், அடுத்ததாக விமான நிலையத்தில் 10 விதமான பைக்குகளையும் வாடகைக்கு நிறுத்த உள்ளது. இந்த சேவை படிப்படியாக ஆலந்தூர் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையதுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. ஒருவேளை ரயில் நிலையத்தில் பயணி கேட்கும் ராயல் என்பீல்ட் பைக், அல்லது ஹார்லி டேவிட்சன் பைக் இல்லாவிட்டால், அடுத்த அரை மணிநேரத்தில் மற்றொரு மெட்ரோ ரயில்நிலையத்தில் இருந்து வரவழைக்கப்படும்.
இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஒவ்வொரு பைக், இருசக்கர வாகனத்தையும் வாடகைக்கு எடுக்கும் பயணிகள், திரும்பப்பெற்றுக் கொள்ளக்கூடிய டெபாசிட் தொகையாக ரூ.2 ஆயிரம் செலுத்தி வாகனத்தை எடுக்கலாம். அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் வரை 2 மணி நேரத்துக்குள் வந்துவிடலாம் அல்லது, 100 கி.மீ வரை ஒருநாள் வரை பயன்படுத்தலாம். நேரத்துக்குஏற்ப கட்டணம் மாறுபடும். மேலும், குறிப்பிட்ட கிலோமீட்டருக்கு அதிகமாக செல்லும்போது ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் கூடுதலாக 5 ரூபாய் வசூலிக்கப்படும்.
இதன்படி டிவிஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ், ஸ்கூட்டி ஸ்ட்ரீக் ஆகியவை நாள் ஒன்று வாடகையாக ரூ. 450 வசூலிக்கப்படும். ஹார்லி டேவிட்சன் பைக்களுக்கு நாள் ஒன்றுவாடகையாக ரூ.5,500 வசூலிக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.
எஸ்எப்ஏ பைக்ஸ் நிறுவனத்தின் தலைவர் சயீத் பிர்தோஸ் ஆலம் கூறுகையில், ''ஒரு பயணி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்துக்கு செல்ல வேண்டுமென்றாலும், அங்கிருந்து சில நண்பர்களைச் சந்திக்க வேண்டுமென்றாலும் இதுபோன்ற வாடகை பைக்குகள் உதவும். வழக்கமான பஸ் பயணத்தில் செல்லும் பயணிகளுக்கு, இந்த வாடகை பைக் அதிகமாக பயன்படும்'' எனத் தெரிவித்தார்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச வாடகையாக ஸ்கூட்டி வாகனத்துக்கு 2 மணி நேரத்துக்கு 125 ரூபாயும், நாள் ஒன்றுக்கு ரூ.450 வசூலிக்கப்படுகிறது. 150சிசி முதல் 160சிசி கொண்ட பல்சர், யூனிகார்ன் பைக்குகளுக்கு 2 மணிநேரத்துக்கு ரூ. 200 நாள் வாடகையாக ரூ.800 வசூலிக்கப்படுகிறது.
பஜாஜ் அவெஞ்சர் வாகனத்துக்கு 2மணிநேரத்துக்கு ரூ.225, நாள் வாடகையாக ரூ.900, ராயல் என்பீல்ட் தண்டர்பேர்டு, கிளாசிஸ் வாகனத்துக்கு 2 மணிநேரத்துக்கு ரூ.350, நாள் வாடகைக்கு ரூ.1400 , ஹார்லி டேவிட்சன் வாகனத்துக்கு நாள் வாடகையாக ரூ.5500 வசூலிக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT