Last Updated : 03 Feb, 2024 06:30 AM

 

Published : 03 Feb 2024 06:30 AM
Last Updated : 03 Feb 2024 06:30 AM

தேனி மாவட்டத்தில் மழை இல்லாத நிலையிலும் ஊற்றுகளால் மூல வைகையில் நீர்வரத்து

மழை இல்லாத நிலையிலும் மூலவைகையில் தொடரும் நீரோட்டம். இடம்: அய்யனார்புரம்.

தேனி: சில வாரங்களாக மழை இல்லாத நிலையிலும் ஊற்றுகளால் மூல வைகையில் நீர்வரத்து காணப் படுகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் நிலைகொண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் ஆண்டி பட்டி, அரண்மனைப்புதூர், வீர பாண்டி, பெரியகுளம், மஞ்சளாறு, கூடலூர், போடி உள்ளிட்ட 13 இடங்களில் மழைமாணிகள் அமைக்கப்பட்டு மழையின் அளவு கணக்கெடுக்கப்படுகிறது.

இந்நிலையில், ஜன.20-ம் தேதி உத்தமபாளையம், கூடலூர் பகுதியில் தலா ஒரு மிமீ. மழையும், சோத்துப்பாறை, போடியில் தலா 2 மி.மீ. மழையும் பெய்தது. அதன் பிறகு மாவட்டத்தில் எங்கும் மழை இல்லை.

இதனால் வைகையின் துணை ஆறுகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. இருப்பினும் வருசநாடு, வெள்ளிமலை உள்ளிட்ட வனப்பகுதி ஊற்று களால் மூல வைகையில் குறைந்த அளவில் நீர்வரத்து உள்ளது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இங்கு மழை இருப்பதில்லை. இதனால் அப்போது மூல வைகை வறண்டு காணப்படும்.

அதேநேரம், கடந்த மாதங்களில் பெய்த மழையால் வனப்பகுதியில் ஊற்றுகளும், நீர்தேக்கங்களும் அதிகரித்துள்ளன. இதனால் மூல வைகையில் தற்போதும் நீரோட்டம் உள்ளது.

இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து நிலைகொண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். மேலும் குடிநீர் திட்டங்களுக்காக ஏராளமான உள் ளாட்சிகள் மூல வைகையைச் சார்ந்துள்ளன. இந்த நீர்வரத்தால் தற்போது குடிநீர் பிரச்சினை ஏற்படவில்லை.

71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69.52 அடியாக உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 1,380 கன அடியும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1,769 கன அடியாகவும் உள்ளது.

கடந்த மாதம் 23-ம் தேதி நீர்மட்டம் 71 அடியாக இருந்த நிலையில், குறைவான நீர்வரத்து, பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் உச்ச அளவில் இருந்து நீர்மட்டம் சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது.

பெரியாறு அணையைப் பொருத்த அளவில் நீர்மட்டம் 135.15 அடியாகவும், நீர்வரத்து 493 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 1,500 கனஅடியாகவும் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x