Published : 02 Feb 2024 09:12 PM
Last Updated : 02 Feb 2024 09:12 PM
‘தமிழக வெற்றி கழகம்’ என்கிற பெயரில் எனது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எனது கட்சியின் சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது என்று நடிகர் விஜய் வெளியிட்ட அறிவிப்பு, தமிழக அரசியல் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இதையொட்டிய அரசியல் கட்சிகளின் கருத்துகளும் கவனத்தை ஈர்த்துள்ளது.
விஜய்யின் ‘அரசியல் பார்வை’ என்ன? - ‘தமிழகத்தில் முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம் ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் ‘பிளவுவாத அரசியல் கலாச்சாரம்’ மறுபுறம் என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.
ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதி - மத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச - ஊழலற்ற திறமையான நிர்வாகத்துக்கு வழிவகுக்க கூடிய அடிப்படை அரசியல் மாற்றத்துக்காக, குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு, தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (பிறப்பால் அனைவரும் சமம்) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.
என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். அதற்காகவே எனது தலைமையில் ‘தமிழக வெற்றி கழகம்’ எனும் கட்சி தொடங்கப்பட்டுள்ளது’ என்று கூறியிருக்கிறார் நடிகர் விஜய்.
அத்துடன், ‘என்னைப் பொறுத்தவரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்துகொள்ள, எம் முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே, அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன்.
என் சார்பில், நான் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலக்கு 2026: மேலும் அவர், ‘வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் எமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின், வரும் மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள்,கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான எம் அரசியல் பயணம் தொடங்கும்
இடைப்பட்ட காலத்தில், எமது கட்சியின் தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டுவரும் பணிகளும், கட்சியின் சட்டவிதிகளுக்குட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மற்றும் கட்சி விரிவாக்க பணிகளுக்கு தேவையான கால அவகாசத்தை கணக்கில் கொண்டே தற்போது எமது கட்சி பதிவிற்காக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
வரும் 2024 மக்களவைத் தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என்று தனது இலக்கு ‘2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்’தான் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார் நடிகர் விஜய்.
அண்ணாமலை வரவேற்பு: “தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கே.எஸ்.அழகிரி: "மக்களைப் பிளவுபடுத்துகிற அரசியலுக்கு எதிராகவும், மக்களின் வளர்ச்சிக்கு தடையாகவும் இருக்கிற சக்திகளுக்கு எதிராக அவர் கருத்து கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்று சுட்டிக்காட்டி அனைவரும் பிறப்பால் சமம் என்ற கருத்தை அவர் வலியுறுத்தியிருப்பது இன்றைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
உதயநிதி பாராட்டு: “இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் இயக்கம் ஆரம்பிக்க உரிமையுள்ளது. நடிகர் விஜய் அரசியல் இயக்கம் தொடங்கியதற்கு நாம் அனைவரும் சேர்ந்து பாராட்டு தெரிவிப்போம். அவரது மக்கள் பணி சிறக்கட்டும்” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முற்போக்கு சிந்தனை: திருமாவளவன் - “ஜனநாயகத்தில் மக்கள் தொண்டாற்றிட யாருக்கும் எந்தவித கட்டுப்பாடும் இல்லை. யாரும், எந்த நேரத்திலும் அரசியலுக்கு வரலாம், பொதுமக்களுக்கு தொண்டாற்றலாம், அதுதான் ஜனநாயகம். அந்த வகையில் நடிகர் விஜய் கட்சியின் பெயரை அறிவித்திருப்பது வரவேற்புகுறியது. அதை வரவேற்கிறோம். நடிகர் விஜய்யின் அரசியல் சிந்தனை முற்போக்காக உள்ளதாக நான் கருதுகிறேன். அதை அவர், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என அவர் முன்வைத்திருப்பது வரவேற்கக்கூடியது” என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமார் கருத்து: “யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அரசியல் என்பது பெருங்கடல். அதில் மூழ்கிப் போனவர்களும் உண்டு; நீந்தி கரை சேர்ந்தவர்களும் உண்டு. விஜய் என்னவாகப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஊழல், மதவாதம் பற்றி விஜய் தனது அறிக்கையில் விமர்சனம் செய்துள்ளது திமுக, பாஜகவுக்குதான் பொருந்தும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
விஜய் கோட்பாடு என்ன? - சீமான்: “கட்சி தொடங்குவது எளிது. தொடர்வதுதான் கடினம். தொடங்கும்போது இருக்கும் ஆர்வமும் ஈடுபாடும் கடைசி வரை இருந்தது என்றாலும் யார் வேண்டும் என்றாலும் வெல்லலாம். அதில் விஜய் மட்டும் விதிவிலக்கு கிடையாது. முதலில் என்ன கோட்பாட்டை விஜய் முன்னிறுத்த போகிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.
இன்றைக்கு இருக்கிற அரசியல் சூழலில் ஒரு நடிகர் தனது ரசிகர்களின் வாக்கை மட்டும் பெற்று அரசியலில் வென்று நாட்டை ஆள்வது என்பது கிடையாது. வெகுவான மக்களையும் ஈர்க்க வேண்டும். விஜய், மண்ணை வெல்வதற்கு முன்பு மக்களின் மனதை வெல்ல வேண்டும். மக்களின் இதயங்களை வெல்ல ஒரே ஆண்டில் முடியாது. தொடர்ந்து 10 ஆண்டுகள் பயணம் செய்ய வேண்டி வரும்" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
ஆளுநர் தமிழிசை: “தமிழகத்துக்கு நிறைய தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். ஒரு குடும்பத்தைச் சேர்ந்தோர்தான் தலைவராக இருக்கவேண்டும் என்பதில்லை. நிறைய இளைய தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். அதனால் விஜய் வந்ததை நான் வரவேற்கிறேன். நிறைய தலைவர்கள் வரவேண்டும்” என்று ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment