Published : 02 Feb 2024 04:42 PM
Last Updated : 02 Feb 2024 04:42 PM

“புதிய கட்சி தொடங்கிய விஜய்யை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி” - அண்ணாமலை

சென்னை: "சகோதரர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் பொருட்டு நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாரபூர்வமாக தனது அரசியல் வருகையை அறிவித்துள்ளார் விஜய். "தமிழக வெற்றி கழகம்" என்று கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்வு தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் அரசியல் வருகை குறித்து மற்ற கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கட்சி தொடர்பான அறிவிப்பில் நடிகர் விஜய், "முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் “ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்” ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் “பிளவுவாத அரசியல் கலாச்சாரம்” மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகத்துக்கு வழிவகுக்கக் கூடிய அடிப்படை அரசியல் மாற்றத்துக்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (பிறப்பால் அனைவரும் சமம்) என்கிற சமத்துவ கொள்கைப்பற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள் சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்" என்று விஜய் தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x