Published : 02 Feb 2024 12:25 PM
Last Updated : 02 Feb 2024 12:25 PM
சென்னை: வெள்ளாற்றின் குறுக்கே பு. ஆதிவராகநல்லூரில் தடுப்பணை கட்ட மறுக்கும் பொம்மை முதல்வருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில், கடலூர் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சேலம் மாவட்டம், கல்வராயன்மலையில் உற்பத்தியாகும் வெள்ளாறு பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பயணித்து கூடலையாத்தூரில் மணிமுக்தா நதியுடன் இணைந்து பரங்கிப்பேட்டை அருகில் வங்கக் கடலில் கலக்கிறது. வெள்ளாற்றின் மொத்த நீளம் சுமார் 205 கிலோ மீட்டர் ஆகும். வெள்ளாற்றின் குறுக்கே சேத்தியாத்தோப்பில் அமையப்பெற்ற அணைக்கட்டில் இருந்து வெள்ளாறு வளைந்து நெளிந்து வங்கக் கடலைச் சென்றடைகிறது.
கடல் நீர் இந்த ஆற்றின் வழியாக உட்புகுவதால் அப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. இதனால், சிதம்பரம் வட்டங்களில் புவனகிரி, சேத்தியாத்தோப்பு பேரூராட்சிகள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி விளைநிலங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. இப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் உப்பு நீராக மாறியதால் தண்ணீர் குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் பயனற்றதாக மாறிவிட்டது.
இப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இதனை தடுக்கக் கோரி பல்வேறு கோரிக்கைகள் வைத்ததைத் தொடர்ந்து, எனது தலைமையிலான அம்மாவின் அரசு 16.8.2017 அன்று கடலூரில் நடைபெற்ற புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், கடல் நீர் வெள்ளாற்றில் உட்புகுவதைத் தடுக்க, வெள்ளாற்றின் குறுக்கே ஆதிவராகநல்லூரில் தடுப்பணை அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டேன். அதன்படி, 92.58 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. ஆதிவராகநல்லூர், ஆயிபுரம், கீழ்புவனகிரி, மேல்மூங்கிலக்குடி, கீழ்மூங்கிலக்குடி ஆகிய கிராமங்களில் இதற்குத் தேவையான நிலம் தேர்வு செய்யப்பட்டு, அளவிடும் பணியும் முடிக்கப்பட்டு, மதிப்பீடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, விடியா திமுக அரசு தடுப்பணை கட்டும் திட்டத்தை கிடப்பில் போட்டதால், புவனகிரி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் கடிதங்கள் வாயிலாகவும், "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் முதல் பணியாகவும் இதைத் தேர்வு செய்து அரசுக்கு அனுப்பி வைத்ததோடு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இரண்டுமுறை தடுப்பணை கட்டுவது குறித்து கழக சட்டமன்ற உறுப்பினர் பேசியுள்ளார். மேலும், 13.9.2023 அன்று தமிழ் நாடு சட்டமன்ற விதி 55-ன் கீழ் கவன ஈர்ப்பு தீர்மானத்தையும் கொண்டுவந்தார்.
இருப்பினும், அதிமுக கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டம் என்பதால் இத்திட்டத்தை விடியா திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேறும்பட்சத்தில் கடலூர் மாவட்டம், புவனகிரி மற்றும் சிதம்பரம் வட்டங்களில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவது தடுக்கப்படும்; விவசாயம் மேலும் செழிப்படையும். விவசாயம் பாதுகாக்கப்படவும், சுத்தமான குடிநீர் கிடைக்கவும், வெள்ளாற்றின் குறுக்கே ஆதிவராகநல்லூரில் தடுப்பணை கட்ட அதிமுக ஆட்சியில் மதிப்பீடு செய்யப்பட்டது.
ஆனால், 2021-ல் ஆட்சிக்கு வந்த விடியா திமுக அரசு வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு எந்தவித தொடர் நடவடிக்கையும் எடுக்காத விடியா திமுக அரசின் பொம்மை முதல்வரை கண்டித்தும், பொதுமக்கள் மற்றும் விவசாயப் பெருங்குடி மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு தடுப்பணை கட்ட வலியுறுத்தியும், அதிமுக கழக கடலூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில், 7.2.2024 - புதன் கிழமை காலை 9.30 மணியளவில், புவனகிரியில் உள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சிலை அருகில், கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அருண்மொழிதேவன், எம்எல்ஏ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கடலூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த, கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் நலனை முன்வைத்தும், விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டும், நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்களும், விவசாயிகளும், பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...